பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்விக்கு அரசாங்கம் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என இருளர் சமூகத்தைச் சேர்ந்த 3 மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கல்வி மற்றும் பொருளாதாரம் என்பது பழங்குடி இருளர் சமுதாய மக்களுக்கு எட்டாக் கனியாகும். கொத்தடிமை வாழ்க்கை முறையை நெடுங்காலாக அனுபவிக்கும் பழங்குடி இருளர்களை அரசாங்கம் மீட்டெடுத்து பாதுகாக்கிறது. அவர்களுக்கு இருப்பிடத்தை வழங்கி, அவர்களது பிள்ளைகளின் கல்விக்கு ஊக்கமளிக்கிறது. தொழில் ரீதியான வழிகாட்டு நெறிமுறைகளையும் வகுத்துள்ளது. இருளர் இன மக்களுக்காக, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மீசநல்லூரில் ரூ.5 கோடியில் 100 குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

இங்கு குடியிருக்கும் சங்கர் மகள் கன்னியம்மாள், ஏழுமலை மகள் தீபகா, பூமிதேவன் மகள் லாவண்யா ஆகிய 3 மாணவிகள் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று, உயர் கல்விக்காக அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இவர்களது பெற்றோர், பல்வேறு நிலைகளில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டவர்கள். மீசநல்லூர் குடியிருப்பில் கடந்த 3 ஆண்டுகளாக வசிக்கின்றனர். தெள்ளார் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து கன்னியம்மாள் 326 மதிப்பெண்ணும், தீபிகா 316 மதிப்பெண்ணும், லாவன்யா 411 மதிப்பெண்ணும் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர்.

கல்வியறிவு குடும்பத்தின் பின்புலம் இல்லாமல், பள்ளி ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் படித்து தேர்ச்சி பெற்றுள்ளனர். மரம் வெட்டுதல், கட்டிட பணி போன்ற கூலி தொழில் செய்து பிழைத்து வருகின்றனர். தந்தையை பிரிந்து வாழும் தீபிகாவின் தாய் அமுலு, ஆடு மேய்ச்சல் பணியில் ஈடுபட்டுள்ளார்.

கடின முயற்சியின் எதிரொலியாக, பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள இருளர் சமூகத்தை சேர்ந்த 3 மாணவிகளும், உயர்கல்வி படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற துடிப்புடன் உள்ளனர். வங்கிப் பணி கனவுடன் தீபிகாவும், வழக்கறிஞர் கனவுடன் லாவண்யாவும், செவிவியர் கனவுடன் கன்னியம்மாளும் உள்ளனர்.

மாணவிகள் மூவரும் கூறும்போது, ”எங்களது பெற்றோர், கொத்தடிமை வாழ்க்கை முறையில் இருந்து மீட்கப்பட்டவர்கள். இந்த நிலையில் இருந்து, எங்களது வாழ்வில் மாற்றம் ஏற்பட வேண்டும். இதற்கு கல்விதான் சிறந்த மருந்தாகும். ஆசிரியர்கள் வழிகாட்டுதலுடன், படிப்பில் கவனம் செலுத்தி பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளோம். உயர்கல்வி படிக்க வேண்டும் என்பது எங்களது விருப்பம். குடும்பத்தின் பொருளாதாரம் என்பது அனைவரும் அறிந்ததே. எங்களது நிலையை உணர்ந்து, உயர்கல்வி படிப்பதற்கு முதல்வர் மற்றும் ஆட்சியர் ஐயா ஆகியோர் உதவிக்கரம் நீட்ட வேண்டும்” என்றனர்.