முந்தைய ஆணையக் கூட்டத்தில் தமிழகத்தின் கடுமையான ஆட்சேபணையும், எதிர்ப்பும் பதிவு செய்யப்பட்ட பிறகும் ஆணையத் தலைவர் பிடிவாதமாக மேகதாது அணை பிரச்சினையை விவாதிக்க முனைவது அவர் மீதான “நம்பகத்தன்மை”யை கேள்விக்குள்ளாக்குகிறது” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான நடுவர் மன்றத்தின் இறுதித் தேர்வு மீதான மேல்முறையீடுகளை விசாரித்து உச்ச நீதிமன்றம் 2018 மே 18-ம் தேதி அளித்த உத்தரவின்படி மத்திய அரசு ஜூன் முதல் தேதி வெளியிட்ட அரசிதழில் “காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின்” செயல் எல்லை தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. இதன்படி உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த தண்ணீரை தமிழகத்திற்கு முறையாக வழங்க வேண்டிய கர்நாடகத்தின் பொறுப்பை “மேலாண்மை” செய்வது மட்டுமே ஆணையத்தின் கடமை பொறுப்பாகும்.
இந்த நிலையில் ஆணையத் தலைவர், கர்நாடக அரசு காவிரியில் கட்ட முனையும் மேகதாது அணை குறித்து ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறியிருப்பது வரம்பு மீறிய செயலாகும்.
முந்தைய ஆணையக் கூட்டத்தில் தமிழகத்தின் கடுமையான ஆட்சேபனையும், எதிர்ப்பும் பதிவு செய்யப்பட்ட பிறகும் ஆணையத் தலைவர் பிடிவாதமாக மேகதாது அணை பிரச்சினையை விவாதிக்க முனைவது அவர் மீதான “நம்பகத்தன்மை”யை கேள்விக்குள்ளாக்குகிறது.
கடந்த ஜூலை 12-ம் தேதி தமிழக முதல்வர் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மத்திய அரசின் நீர்வள ஆற்றல்துறை அமைச்சரின் கவனத்திற்கு அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் நேரில் தெரிவித்த போது “தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகம் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைக்கும் நீர்வள ஆற்றல் துறை ஒப்புதல் அளிக்காது” என்று உறுதியளித்தார்.
இதன்படி ஆணையத் தலைவரின் வரம்புமீறலை கட்டுப்படுத்த வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.