இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் இன்னும் முழுமையாக விலகவில்லை. ஆனாலும், மக்கள் முகக்கவசம் அணிந்து செல்வது வெகுவாகக் குறைந்துவிட்டது. கரோனா கட்டுப்பாட்டு வழிகளைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய அரசின் நிதி ஆயோக்கின் சுகாதாரக்குழு உறுப்பினர் மருத்துவர் வி.கே.பால், சுகாதாரத்துறை இணைச்செயலர் லாவ் அகர்வால் நேற்று ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தனர்.

அப்போது வி.கே.பால் கூறுகையில், “இந்தியாவில் மக்கள் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிவதும், முகக்கவசத்தின் பயன்பாடும் வெகுவாகக் குறைந்துவிட்டது. இது கரோனா 2-வது அலைக்கு முன்பிருந்த நிலைக்குச் சென்றுவிட்டது. இப்படியே சென்றால் நாம் மீண்டும் ஆபத்தான கட்டத்துக்குள் சென்றுவிடுவோம்.

கரோனா வைரஸிலிருந்து நமக்குக் கிடைத்திருக்கும் பாதுகாப்பு மிகக் குறைவானதுதான். இன்னும் ஆபத்தான கட்டத்தைக் கடக்கவில்லை. ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில்தான் இருந்து வருகிறோம். ஆதலால், இரு தடுப்பூசிகளும், முகக்கவசமும், சமூக விலகலும் மிகவும் அவசியம். உலகின் சூழலை அறிந்து மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலர் லாவ் அகர்வால் கூறுகையில், “தடுப்பூசி செலுத்தும் அளவு அதிகரித்தவுடன், மக்களிடையே பாதுகாப்பு முறைகள் குறைந்து வருகின்றன என்பதை உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. நம்மைப் பாதுகாக்கும் வழிகளான முகக்கவசம், சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும்.

புதிதாக உருமாற்றம் அடைந்துவரும் ஒமைக்ரான் வைரஸைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய தேவையான நடவடிக்கைகள் குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சகங்களுக்குத் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்கள் மூலம் அறிவுறுத்தி வருகிறோம்.

பரிசோதனைகளை அதிகப்படுத்துதல், தடுப்பூசி, கண்காணிப்பு, சர்வதேசப் பயணிகளைக் கண்காணித்தல் போன்றவற்றைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். எச்சரிக்கைப் பட்டியலில் இருக்கும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனை செய்தல், அவர்களுக்கு பாசிட்டிவ் இருந்தால், மரபணுப் பரிசோதனைக்கு அனுப்ப மாநில அரசுகளுக்குக் கூறியுள்ளோம். கரோனா தடுப்பு முறைகளைத் தீவிரமாக அமல்படுத்த மாநிலங்களைக் கேட்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.