ஐடி நிறுவனத்தில் வேலையை  விட்டு நிறுத்தியதால் மனவுலைச்சலில் இருந்த பெண் 24வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் ஓஎம்ஆர் சாலை சிறுசேரி சிப்காட் அருகே உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் 35-வயதான ஜெனிபர் என்பவர் தாயுடன் வசித்து வந்துள்ளார். நேற்று தான் வசித்து வந்த சுமார் 33 அடுக்குமாடி கொண்ட குடியிருப்பில் 24வது மாடியிலிருந்து ஜெனிபர் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தகவல் அறிந்த கேளம்பாக்கம் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெனிபர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் இச்சம்பவம் குறித்து ஜெனிபர் அம்மாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், ஜெனிபர்க்கு 35வயது ஆகியும் திருமணம் ஆகாமல் இருந்தது அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வந்ததாகவும், அதனால் தினந்தோறும் இரவு ஜெனிபர் உறக்கம் இல்லாமல் தவித்து வந்ததால் தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தாழம்பூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஜெனிபரை நிறுவனம் திடீரென வேலையை விட்டு நிறுத்தியதாக கூறப்படுகிறது. வேலையை விட்டு நிறுத்தியதால் கடந்த மூன்று நாட்களாக அதிக மன உளைச்சலில் இருந்த ஜெனிபர்  24வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.  மேலும் இச்சம்பவம் குறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.