நாட்டின் முக்கியமான சொத்துகளை மத்திய அரசு தனியாருக்குத் தாரை வார்க்கிறது என்று மத்திய அரசின் தேசிய பணமாக்கல் திட்டத்தை எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. இந்நிலையில்,சொத்துகள் எதுவும் விற்கப்படவில்லை. குறிப்பிட்ட கால அளவில்குத்தகைக்குத்தான் விடப்படுகின்றன என்றும் மத்திய அரசு நேற்று விளக்கமளித்துள்ளது.

ஆகஸ்ட் 23-ம் தேதி மத்திய அரசு தேசிய பணமாக்கல் திட்டத்தை அறிவித்தது. அதன்படி, சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின் உற்பத்தி மற்றும் விநியோகம், சுரங்கம், எரிவாயு குழாய் ஆகிய அரசின் சொத்துகள் தனியாருக்கு குத்தகைக்கு விடப்படவுள்ளன. இதன்மூலம் அடுத்த நான்கு ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடி நிதித் திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

தொடங்கியதே காங்கிரஸ்தான்

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சிகள் உட்பட நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ‘70 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வந்த சொத்துகள் தனியாருக்கு தாரைவார்க்கப்படுகின்றன’ என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தார்.

இந்நிலையில், “சொத்துகள் எதுவும் விற்பனைக்கு அல்ல என்பது இந்தத் திட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவை,குறிப்பிட்ட கால அளவிலான குத்தகைக்குத்தான் விடப்படுகின்றன. குத்தகை காலகட்டம் முடிந்த பிறகு அந்தச் சொத்துகள் மீண்டும் அரசின் கைகளுக்கு வந்துவிடும்.

இந்த குத்தகை மூலம் கிடைக்கும் நிதி நாட்டின் வளர்ச்சித்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும். இது புதிய நடைமுறை இல்லை. காங்கிரஸ் காலத்திலும் இந்த நடைமுறை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் திட்டத்துக்கு தொடக்கப்புள்ளி வைத்ததே காங்கிரஸ் கட்சிதான்” என்று மத்திய அரசு விளக்கமளித்து உள்ளது.-பிடிஐ