எங்களை எதிர்க்கும் கட்சிகள் சிதறிக் கிடப்பதால் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்’’ என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கருத்து தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “இந்த தேர்தல் இந்தியாவை, ஜனநாயகத்தை அரசியல் அமைப்புச் சட்டத்தை காப்பதற்கான தேர்தல். பாஜக 10 ஆண்டுகால ஆட்சியில் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவர். தற்போது மோடி உத்திரவாதம் என்று பிரச்சாரம் செய்கின்றனர். இது மோடி உத்திரவாதம் இல்லை. உபத்திரவாதம் தான் அதிகமாக இருக்கும். இது நாட்டு மக்களை ஏமாற்றும் செயல்.

 

 

திமுக தலைமையிலான கூட்டணி 10 ஆண்டுகளாக தொடரும் கொள்கை கூட்டணி. அதனால் தொகுதி பங்கீட்டில் முரண்பாடு இல்லாமல் போனது. ஆனால் பாஜக, பாமக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. அவர்களை மக்கள் நிராகரிப்பார்கள். அதேபோல் பாஜகவை விட்டு விலகி இருந்தால்கூட, ஏற்கனவே அவர்கள் கொள்கைகளை அதிமுக ஏற்று கொண்டு செயல்பட்டது. இதனால் அதிமுகவுடன் யாரும் கூட்டணி வைக்க முன்வரவில்லை.

 

 

கடந்த 2019 தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஒரே அணியில் இருந்தன. அப்போதே திமுக கூட்டணி தமிழகம், புதுச்சேரியில் 39 இடங்களில் வென்றது. தற்போது எங்களை எதிர்க்கும் கட்சிகள் சிதறி கிடக்கின்றன. இதனால் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும்.

வெள்ளம் பாதித்தபோது தமிழகம் வராத பிரதமர், வாக்கு கேட்டு மட்டும் வருவதால், மோடியையும், பாஜகவையும் தமிழக மக்கள் நிராகரிப்பர். அதேபோல் பாஜகவுக்கு ஏற்கெனவே துணைபோன அதிமுகவையும் நிராகரிப்பர். கருத்துக் கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பை செய்கின்றனர். அதை பொய்யாக்கி தேசிய அளவில் இண்டியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.

மோடி ஹிட்லரை தலைவராக ஏற்றுக் கொண்டார். கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் ஷோபா தமிழர்களை பயங்கரவாதிகள் என்று சித்தரித்து பேசியதை கண்டிக்கிறோம். மோடியில் இருந்து அவரது அமைச்சர்கள் வரை பொறுப்பற்ற பேச்சுகளை பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளனர். கண்டனம் வலுத்த பின் ஊடகங்கள் மீது பழிபோட்டு தப்பித்துக்கொள்ள பார்க்கின்றனர்.

 

 

தமிழிசை சவுந்திரராஜன் அரசியலுக்கு வருவது அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக உள்ளது. பிரதமர் மேடையில் பேசி வருவது, அநாகரிகமான பேச்சு. பொறுப்புக்கு ஏற்ப பேசவில்லை. கன்னியாகுமரி, கோவை, சேலம், சென்னை உள்ளிட்ட பல இடங்களிலும் அவர் பேசும்போது, அரசியல், நாகரீக முதிர்ச்சி கடுகு அளவுகூட இல்லை. நாலாந்தர பேச்சாளர் போல பேசிவிட்டு செல்கிறார்” என்று கூறினார்.