திருத்தணி: திருத்தணி அருகே முன்னாள் தலைமை நீதிபதி நிலத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து விசாரணை நடக்கிறது. திருத்தணி அடுத்த திருவாலங்காடு அருகே காவேரிராஜபுரம் கிராமத்தில், கர்நாடகா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.டி.தினகரனுக்கு சொந்தமான சுமார் 400 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு, மா, தேக்கு உள்ளிட்ட பல வகையான மரங்கள் உள்ளது. கடந்த சில நாட்களாக கடுமையான கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது.
இதில் செடி, கொடிகளும் காய்ந்து வருகிறது. இந்நிலையில், திடீரென இந்த நிலத்தில் தீப்பற்றியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவியதால் அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து திருத்தணி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் தீ பரவி, புற்கள், செடிகள் தீக்கிரையாகின. ஆனால் மா, தேக்கு உள்ளிட்ட மரங்கள் தப்பியது. தீ பரவியது எப்படி, யாராவது விஷமிகள் தீ வைத்தார்களா என திருவாலங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருத்தணி அருகே மாஜி தலைமை நீதிபதி நிலத்தில் திடீர் தீ
