உத்தர பிரதேசத்தின் முக்கிய எதிர்க்கட்சி சமாஜ்வாதி. இதன் நிறுவனர் முலாயமுக்கு பிறகு 2-வது முக்கிய தலைவராக கருதப்பட்டவர் அவரது சகோதரர் ஷிவ்பால் சிங் யாதவ். ஆனால், 2017-ல் ஷிவ்பால் சிங் ஒதுக்கப்பட்டு, மகன் அகிலேஷ் சிங்கை கட்சித் தலைவராக்கினார் முலாயம் சிங். இதனால் மோதல் துவங்கியது. கட்சியைக் கைப்பற்ற ஷிவ்பால் சிங் தொடுத்த வழக்கும் தோல்வி அடைந்தது. அதன்பின் சமாஜ்வாதி தலைவரானார் அகிலேஷ் சிங்.

ஆனால், சமாஜ்வாதிக்கு போட்டியாக சித்தப்பா ஷிவ்பால் சிங், ‘பிரகதிஷீல் சமாஜ்வாதி பார்ட்டி லோகியா’ (ஆர்எஸ்பிஎல்) என்ற பெயரில் ஆகஸ்ட் 2018-ல் புதிய கட்சியை தொடங்கினார். கடந்த 2019 மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட்டவருக்கு ஒரு தொகுதியும் கிடைக்கவில்லை. ஆனால், இவரது கட்சி வேட்பாளர்களால் யாதவர் வாக்குகள் பிரிந்து சமாஜ்வாதியின் வெற்றி பல தொகுதிகளில் பறிபோனது. இந்த முறை, சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக வேறு சில சிறிய கட்சிகளுடன் இணைந்து 3-வது அணி அமைக்க முயன்றார் ஷிவ்பால் சிங்.

ஆனால், மூத்த சகோதரர் முலாயமின் வற்புறுத்தலால், சமாஜ்வாதியிடமே கூட்டணி வைக்க சம்மதித்து, தனது கட்சிக்கு 100 தொகுதி ஒதுக்க கேட்டிருந்தார். எனினும், ஷிவ்பால் சிங்கிற்கு மட்டும் அவர் எம்எல்ஏ.வாக இருக்கும் ஜஸ்வந்த் நகர் தொகுதியை மட்டும் அளித்தார் அகிலேஷ் சிங். சமாஜ்வாதியின் வெற்றித் தொகுதியான இதில், 5-வது முறை எம்எல்ஏ.வாக ஷிவ்பால் சிங் உள்ளார். இவருக்கு மட்டும் கிடைத்த ஒரு தொகுதியிலும் அவர் சமாஜ்வாதியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

எனினும், தான் கேட்ட 100 தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத கட்சியினருக்கு ஆட்சி அமைந்தால் உரிய மரியாதை அளிக்கப்படும் என்று ஷிவ்பால் சிங் உறுதி அளித்துள்ளார். சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் சிங்குடன் ஷிவ்பால் சமாதானமாகி விட்டதாக கூறப்படுகிறது.

எனினும், அகிலேஷ் மீது சந்தேகம் இருப்பதால் தனது ஆர்எஸ்பிஎல் கட்சியை கலைத்து சமாஜ்வாதியுடன் இணைக்க ஷிவ்பால் சிங் மறுத்து விட்டார்.

இவர்களது கூட்டணி வித்தி யாசமானதாக இருப்பினும், இந்த முறை சட்டப்பேரவை தேர்தலில் யாதவர்களின் வாக்குகள் கடந்த மக்களவை தேர்தலை போல் பிரியாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.