சிறுமி தவயாழினிக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் இருப்பதை அறிந்த அவரது தாயார். அதற்கு ஏற்ப பயிற்சிகளை வழங்கினார். தனது மகளின் திறமையை வெளி உலகிற்கு தெரியப்படுத்தும் விதமாக இந்தியா புக்ஸ் ஆஃப் ரெகார்ட்ஸில் அக்ரலிக் பெயின்டிங் பிரிவில் பங்கேற்க வைத்தார்.
அக்ரலிக் பெயின்ட் ஓவியம் வரைந்து இந்தியா புக்ஸ் ஆஃப் ரெகார்ட்ஸில் இடம் பிடித்துள்ளார் தேனியை சேர்ந்த நான்கு வயது சிறுமியான தவயாழினி.
தேனி பங்களாமேடு திட்டச்சாலை பகுதியை சேர்ந்தவர் கவிதா. தமிழ்நாடு பால்வளத்துறையில் முதுநிலை ஆய்வாளராக பணியாற்றி வரும் இவருக்கு, தவயாழினி என்ற நான்கு வயதுள்ள பெண் குழந்தை உள்ளது. தாயின் அரவணைப்பில் மட்டுமே வளர்ந்து வந்த தவயாழினியின் தனித்திறமை குறித்து தாய் கவிதா நுண்ணிப்பாக கவனித்து வந்தார். தன் மகளுக்கு ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம் இருப்பதை அறிந்த தாய் கவிதா, ஊரடங்கு காலம் என்பதால் வீட்டிலே இருந்த யாழினிக்கு ஓவியம் வரையத் தேவையான அனைத்தையும் வாங்கி கொடுத்ததோடு மட்டுமல்லாமல் ஓவியம் வரைவதற்கும் கற்றுக்கொடுத்துள்ளார்.
தனது அம்மாவின் அறிவுரையின் படி ஓவியங்கள் வரைந்த குழந்தை தவயாழினி, இயற்கை சார்ந்த ஓவியங்களையே அதிக ஆர்வத்துடன் வரையத் துவங்கினார். மலைகள், மரங்கள், மயில், சிங்கம், கடல்வாழ் உயிரினங்கள் என தத்ரூபமாக வரைந்து வந்துள்ளார்.
தனது மகளின் ஓவியத்திறனை மேம்படுத்தும் விதமாக பார்ப்பதற்கு முப்பரிமாண முறையில் காட்சி அளிக்கும் அக்ரலிக் பெயின்டிங் முறையை கற்றுக்கொடுத்துள்ளார். இந்த அக்ரலிக் பெயின்டிங்கிற்கு என எட்டு வகையான பிரஷ்கள் மற்றும் ஸ்பான்ச்கள் வாங்கி கொடுத்து ஊக்கப்படுத்தினார். பின்னர் தனது மகளின் திறமையை வெளி உலகிற்கு தெரியப்படுத்தும் விதமாக போட்டிகளில் பங்கேற்க வைக்க முடிவு செய்து, இந்தியா புக்ஸ் ஆஃப் ரெகார்ட்ஸில் அக்ரலிக் பெயின்டிங் பிரிவில் கடந்த ஜூலை மாதம் பங்கேற்க வைத்தார்.
ஆன்லைன் முறையில் நடைபெற்ற இந்த போட்டியில் ஒரே பக்கத்தில் நான்கு வகையான தலைப்புகள் வழங்கப்படும். அதனை ஓவியமாக வரைய வேண்டும். அதில் அன்டர் வாட்டர், கேலக்ஸி, நைட் டெசர்ட், டே ஸ்பிரிங் ஆகிய நான்கு தலைப்புகளில் சிறுமி தவயாழினி 20 நிமிடங்களில் ஓவியம் வரைந்து வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
இது குறித்து தவயாழினியின் தாய் கவிதா கூறுகையில், ஆரம்பத்தில் பென்சிலில் எழுதுவதை போலவே பெயிண்ட் பிரஷை பிடித்து யாழினி எழுதியதாகவும் இதன் மூலமாகவே தன் குழந்தைக்கு ஓவியம் வரையும் திறன் இருப்பதை அறிந்து சரியான முறையில் ஊக்குவித்து இந்தியா புக்ஸ் ஆஃப் ரெகார்ட்ஸ் போட்டியில் பங்கேற்க வைதததாகவும் தெரிவித்தார்.
நான்கு வயதுள்ள சிறுமி அக்ரலிக் பெயின்டிங்-ல் வெற்றி பெற்றது இதுவே முதன்முறை என தெரிவித்த அவர், அடுத்தபடியாக பல்வேறு போட்டிகளில் தனது மகளை பங்கேற்க வைக்க உள்ளதாக கூறினார்.
எழுத்துக்களை கிறுக்கல்களாக எழுதும் மழலை வயதில் வண்ணமயமான ஓவியங்களை தத்ரூபமாக வரைந்து அசத்துவதோடு மட்டுமல்லாமல் அக்ரலிக் பெயிண்ட் ஓவியம் வரைந்து இந்தியா புக்ஸ் ஆஃப் ரெகார்ட்ஸில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ள குழந்தை தவயாழினிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.