தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனும் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈவெரா மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

46 வயதான திருமகன் ஈவெரா 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அத்துடன் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். கடந்த ஒரு வார காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி திருமகன் ஈவெரா காலமானார். இதையடுத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஈரோடு கச்சேரி சாலையில் உள்ள இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு உள்ளது. திருமகன் ஈவெராவுக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். திருமகன் ஈவெராவின் மரணச் செய்தி அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திருமகன் ஈவெரா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், திருமகன் ஈ.வெ.ரா. மறைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரும் அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அமைதியோடும் பொறுப்புணர்வோடும் அவை மூத்தவர்கள் மீது மரியாதையோடும் நடந்து அனைவரது அன்புக்கும் உரியவராக திருமகன் ஈ.வெ.ரா. திகழ்ந்ததாக அவர் புகழாரம் சூட்டியுள்ளார். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் இரங்கல் தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டமன்ற உறுப்பினரும் தமிழக காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளருமான திருமகன் ஈவேரா மறைவுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தனது இரங்கலைப் பதிவு செய்தார்.

தந்தை பெரியாரின் குடும்ப வாரிசுகளில் ஒருவரான திருமகன் ஈவெரா காலமான செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். வாழ வேண்டிய 46 வயதிலேயே அவர் இயற்கை எய்தியது அந்தக் குடும்பத்தினரால் மட்டுமல்ல, யாராலும் தாங்கிக் கொள்ள முடியாது எனவும் தனது இரங்கல் குறிப்பில் வைகோ தெரிவித்துள்ளார்.