பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கொலை மிரட்டல் விடுத்த ஈரானின் கோர்டாட் என்ற அமைப்புக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கடந்த ஆகஸ்டு மாதம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஓர் இலக்கிய நிகழ்வில் பேசிக்கொண்டு இருக்கும்போது தாக்குதலுக்கு உள்ளானார். இந்தத் தாக்குதலில் சல்மான் ருஷ்டி ஒரு கண் பார்வையை இழந்ததாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, ஈரானைச் சேர்ந்த கோர்டாட் அமைப்பு சல்மான் ருஷ்டியை கொலை செய்பவர்களுக்கு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று சமீபத்தில் அறிவித்து இருந்தது. இந்த நிலையில், இந்த அமைப்புக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க நிதித் துறை தரப்பில் வெளியிட்ட தகவலில், “இந்த வன்முறை நிச்சயம் கண்டிக்கத்தக்கது. கருத்து சுதந்திரம், பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிராக ஈரான் ஏற்படுத்தும் அச்சுறுத்தலை அமெரிக்கா வேடிக்கை பார்க்காது. கோர்டாட் அமைப்பின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுகிறது. விரைவில் சல்மான் ருஷ்டி குணமடைவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னணி: இந்தியாவின் மும்பை நகரில் பிறந்தவர் அகமது சல்மான் ருஷ்டி. பின்னாளில் அவரது குடும்பம் பிரிட்டனுக்கு புலம் பெயர்ந்தது. ‘மிட்நைட்ஸ் சில்ட்ரன்’ படைப்புக்காக புக்கர் பரிசை வென்றவர். 1988-ல் வெளிவந்த இவரது ‘தி சாட்டனிக் வெர்சஸ்’ படைப்பு, உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உலகம் முழுவதுமே இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்தப் புத்தகம் இன்றளவும் தடை செய்யப்பட்டுள்ளது. இஸ்லாம் மதத்தை, முஸ்லிம்களின் இறைத்தூதரை, இறை நம்பிக்கையை இந்தப் புத்தகம் அவமதித்துவிட்டது என்பதே சல்மான் ருஷ்டி மீதான குற்றச்சாட்டு. இதனைத் தொடர்ந்து பல்வேறு பயங்கரவாத அமைப்புகளும் சல்மான் ருஷ்டிக்கு கொலை மிரட்டல் விடுத்தன. அவரது உயிருக்கு விலையும் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிலையில்தான் சல்மான் ருஷ்டி ஆகஸ்ட் மாதம் தாக்குதலுக்கு உள்ளானார்.