தீண்டாமையை உடைத்தெறிந்தது திரையரங்குக்குள் உழைக்கும் எளிய மக்களை உள்ளே அனுமதிக்காமல் தீண்டாமையை கடைபிடித்தது ஆபத்தான போக்கு என்று இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.

சென்னை ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர் சமூகத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவத்திற்கு இயக்குநர் வெற்றிமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், “நூறு ஆண்டுகளுக்கு முன்பாக தீண்டாமையை உடைத்தெறிந்தது திரையரங்கம். ஆனால் இன்று உழைக்கும் எளிய மக்களை உள்ளே அனுமதிக்காமல் தீண்டாமையை கடைபிடித்தது ஆபத்தான போக்கு. எதிர்ப்பின் காரணமாக பின்னர் அனுமதி தந்திருந்த போதிலும், இப்படி ஒரு நிகழ்வு நடந்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்று பதிவிட்டுள்ளார்.

ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், கெளதம் மேனன், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் ‘பத்து தல’ திரைப்படம் நேற்று (மார்ச் 30) தமிழகம் முழுவதும் வெளியானது. படத்தைப் பார்ப்பதற்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்குக்கு நரிக்குறவர் இன மக்கள் வந்தனர். அப்போது அவர்கள் கையில் டிக்கெட் வைத்திருந்தும் அவர்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வீடியோ காட்சியும் வெளியானது.

இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திரையரங்கு நிர்வாகம் விளக்கம் அளித்தது. அதில், ‘பத்து தல’ படம் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளதால் அவர்கள் குழந்தைகளுடன் வந்ததால் முதலில் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், பிறகு அவர்கள் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவத்திற்கு நடிகர், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இப்படி ஒரு நிகழ்வு நடந்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று வெற்றிமாறன் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.