பெரம்பலூர் அருகே மாமூல் தர மறுத்த மருந்து விற்பனைக் கடை உரிமையாளரை அடித்துக் கொலை செய்த ரவுடி உட்பட 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மாரப்பன் மகன் நாகராஜன்(44). இவர், அதே ஊரில் மருந்துக் கடை நடத்தி வந்தார். அதே ஊரைச் சேர்ந்தவர்கள் பெரியசாமி மகன் பிரபாகரன்(29), ஆனந்த் மகன் ரகுநாத்(23). இவர்கள் இருவர் மீதும் ஏற்கெனவே வழிப்பறி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல வழக்குகள் பெரம்பலூர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. இதில், பிரபாகரன் பெயர் ரவுடி பட்டியலில் உள்ளது.
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு 10 மணியளவில் நாகராஜனின் கடைக்கு வந்த பிரபாகரன், ரகுநாத் ஆகிய இருவரும் நாகராஜனை மிரட்டி மாமூல் வாங்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து, அவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு மீண்டும் வந்து, நாகராஜனிடம் மாமூல் கேட்டு மிரட்டியதாகவும், மாமூல் தர மறுத்த அவரை ஆயுதங்களால் தலையில் தாக்கிவிட்டு ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, நாகராஜன் வீட்டுக்குச் சென்ற நிலையில் அங்கு மயங்கி விழுந்தார். அவரை குடும்பத்தினர் உடனடியாக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நாகராஜனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள ரவுடிகள் பிரபாகரன், ரகுநாத் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.