கேரள மாநிலத்தை உலுக்கிய, மனைவியைக் கொடிய விஷம் கொண்ட பாம்பைக் கடிக்கவைத்துக் கொலை செய்த வழக்கில் கணவர் சூரஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், வேறு இரு வழக்குகளில் 17 ஆண்டுகள் சிறையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து கொல்லம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கொல்லம் மாவட்டம், அஞ்சல் நகரைச் சேர்ந்தவர் சூரஜ். இவரின் மனைவி உத்ரா. திருமணத்தின்போது, வங்கி ஊழியரான சூரஜுக்கு வரதட்சணையாக ரூ.10 லட்சம் பணம், 100 சவரன் நகை, நிலம் என உத்ரா குடும்பத்தினர் வழங்கினர். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உண்டு. இந்நிலையில் மனைவியை இயற்கையான முறையில் மரணம் நிகழச் செய்து, மனைவியின் நகைகள், பணத்தை அபகரிக்க சூரஜ் திட்மிட்டார், 2-வது திருமணம் செய்யவும் எண்ணினார்.
இதற்காக பாம்பை வைத்து, தனது மனைவி உத்ராவைக் கொலை செய்ய சூரஜ் திட்டமிட்டார். முதல் முயற்சியாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது வீட்டில் உத்ரா இருந்தபோது, பாம்பைக் கொண்டு கடிக்க வைத்துக் கொலை செய்ய சூரஜ் முதலில் முயன்றார். ஆனால், பாம்பு கடித்தவுடன் உத்ரா கூச்சலிட்டதால் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்ததால் உயிர் தப்பிவிட்டார்.
2-வது முயற்சியாக கடந்த ஆண்டு மார்ச் 2-ம் தேதி 2-வது முறையாக வரியன் பாம்பு உத்ராவைக் கடித்தது. இதில் திருவல்லா மருத்துவமனையில் 56 நாட்கள் சிகிச்சைக்குப் பின் உத்ரா குணமடைந்தார்.
அதன்பின், கடந்த ஆண்டு மே 6-ம் தேதி கொல்லம் அஞ்சல் பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டில் ஓய்வில் இருந்த உத்ராவை சூரஜ் பார்க்கச் சென்றார். அப்போது, பாட்டிலில் அடைத்து எடுத்துச் சென்ற பாம்பைக் கொண்டு உத்ராவை சூரஜ் கடிக்க வைத்துள்ளார். பாம்பு கடித்த மறுநாள் உத்ரா உயிரிழந்தார். இதற்காக பாம்பு பிடிக்கும் நபர் சுரேஷ் என்பவரிடம் இருந்து பாம்பை சூரஜ் வாங்கியுள்ளார்.
கடந்த ஆண்டு மே 7-ம் தேதி உத்ரா வீட்டில் பாம்பு கடித்து உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். ஆனால், உத்ராவின் பெற்றோர் தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீஸாரிடம் புகார் அளித்தனர். உத்ராவின் மரணம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்களுக்கு எதிரான உரிமைகள் பறிப்பு, வரதட்சணைக் கொடுமை போன்ற விவகாரங்களைக் கிளப்பியது.
இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை முடுக்கி விடப்பட்டது. போலீஸார் நடத்திய விசாரணையில் கணவர் சூரஜ், அவரது பெற்றோர், சகோதரிகள் விசாரணை நடத்திக் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சூரஜ் கைது செய்யப்பட்ட 82-வது நாளில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி போலீஸார் 288 ஆவணங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். 87 சாட்சிகள், 40 ஆதாரங்களைக் கொல்லம் மாவட்டக் கூடுதல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
சூரஜுக்குப் பாம்பை விற்பனை செய்த பாம்பாட்டி சுரேஷ் போலீஸார் விசாரணையில் அப்ரூவராக மாறினார். முதலில் சூரஜ் குற்றவாளி இல்லை என அவரது பெற்றோர், சகோதரிகள் தெரிவித்தனர். போலீஸார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் உத்ரா கொலையில் அவர்களுக்கும் பங்கு இருப்பதும், உத்ராவின் நகைகளை வீட்டின் சுற்றுப்புறச் சுவருக்கு அருகே புதைத்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சூரஜின் பெற்றோர், சகோதர, சகோதரிகள் மீது வரதட்சணைக் கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை முழுவதையும் போலீஸார் நவீன அறிவியல் முறைப்படி செய்து எவ்வாறு சூரஜ் உத்ராவைக் கொலை செய்தார் என்பதையும் நடித்துக் காண்பிக்கச் செய்தனர். இந்த டம்மி கொலைக்காக, உயிருடன் பாம்பு ஒன்றையும் போலீஸார் பயன்படுத்தினர்.
இந்த விசாரணையில் உத்தரவை பாம்பு இயற்கையாகக் கடிக்கவில்லை, சூரஜ் பாம்பின் தலையைப் பிடித்துக் கடிக்கவைத்தது தெரியவந்தது. சாதாரணமாக பாம்பு கடித்தால் அதன் விஷம் 1.7 செ.மீ. வரைதான் செல்லும். ஆனால், பாம்பின் தலையைப் பிடித்து ஒருவரைக் கடிக்க வைத்தால் விஷம் உடலில் பாயும் அளவு 2.8 செ.மீ. வரை பாயும் என நிரூபிக்கப்பட்டது. இதற்காக குளத்துப்புழா அரிப்பாவில் உள்ள வனத்துறை பயிற்சி மையத்தில் கடந்த ஆண்டு ஜூலை கடைசி வாரத்தில் சோதனை நடத்தப்பட்டது.
கொல்லப்பட்ட உத்ராவின் உடலிலும் கண்டுபிடிக்கப்பட்ட இரு பாம்புக் கடியும் ஒன்று 2.5 செ.மீ. வரையிலும் மற்றொன்று 2.8 செ.மீ. வரை சென்றது தெரியவந்தது. பாம்பு வீரியமாகக் கடிக்க வேண்டும் என்பதற்காக கொலை நடப்பதற்கு முன் ஒரு வாரமாக பாம்புக்குத் தீனி போடாமல் பிளாஸ்டிக் ஜாடியில் வைத்திருந்தனர். இதனால் பாம்பு மனிதரைக் கண்டவுடன் ஆக்ரோஷமாகக் கடித்துள்ளது என்பது தெரியவந்தது.
இந்த வழக்கில் சூரஜ் மீது போலீஸார் ஐபிசி 302, 307, 328, 201 ஆகிய பிரிவுகளில் குற்றவாளி எனக் கூடுதல் நீதிபதி எம்.மனோஜ் நேற்று உறுதி செய்தார். தண்டனை விவரங்களை நீதிபதி மனோஜ் இன்று அறிவித்தார்.
அதில், “உத்ராவைக் கொலை செய்தமைக்காக சூரஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், பாம்பைக் கடிக்க வைத்தது, ஆதாரங்களை அழிக்க முயன்ற பிரிவுகளில் முறையே 7 ஆண்டுகள், 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இரட்டை ஆயுள் தண்டனை முடிந்தபின் அதன்பின் 17 ஆண்டுகள் சிறை தண்டனையை சூரஜ் அனுபவிக்க வேண்டும். ஏக காலத்தில் அனுபவிக்கக் கூடாது” என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
இதனால் சூரஜின் எஞ்சியுள்ள வாழ்க்கை முழுவதும் சிறையில்தான் கழிக்க வேண்டியது வரும் எனத் தெரிகிறது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதை அடுத்து, உத்ராவின் பெற்றோர் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர். நீதிபதி அளித்த தீர்ப்பு தங்களுக்கு மனநிறைவைத் தரவில்லை என்றும், அதிகபட்ச தண்டனையாகத் தூக்கு தண்டனை கிடைக்கும் என்றும் எதிர்பார்த்தோம் எனத் தெரிவித்தனர். சூரஜுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க மேல்முறையீடு செய்வோம் என உத்ராவின் தந்தை விஜயசேனன், சகோதரர் விஸ்னு ஆகியோர் தெரிவித்தனர்.