உ.பி. முதல்கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 46% பேர் கோடீஸ்வரர்கள் என்றும் 25% பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
உ.பி.யில் முதல் கட்டமாக 58 தொகுதிகளில் வரும் 10-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக தாக்கல் செய்யப்பட்ட 615 பேரின் வேட்பு மனுக்களில் உள்ள விவரங்களை, தேர்தல் கண்காணிப்பு அமைப்பான ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) பகுப்பாய்வு செய்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
உ.பி. முதல்கட்ட தேர்தலில் போட்டியிடும் 615 வேட்பாளர்களில் 46% பேர் (280 பேர்) தாங்கள் கோடீஸ்வரர்கள் என வேட்பு மனுவில் தெரிவித்துள்ளனர். பாஜக வேட்பாளர்களில் 55 பேர், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 50, சமாஜ்வாதியின் 23, காங்கிரஸின் 32, ஆர்எல்டியின் 28, ஆம் ஆத்மியின் 22 பேர் தங்களுக்கு ரூ.1 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதன்மூலம் முக்கிய அரசியல் கட்சிகள் வசதி படைத்தவர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கி உள்ளது தெரிகிறது.
சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு தலா ரூ.13.23 கோடியாக உள்ளது.இதுபோல பாஜக வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு தலா ரூ.12.01 கோடி, ஆர்எல்டி ரூ.8.32 கோடி, பகுஜன் சமாஜ் ரூ.7.71 கோடி, காங்கிரஸ் ரூ.3.08 கோடி, ஆம் ஆத்மி ரூ.1.23 கோடி ஆகும். இதுபோல 25% பேர் (156) மீது குற்ற வழக்குகளும் 121 பேர் மீது கொலை, பலாத்காரம் உள்ளிட்ட தீவிர குற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.