கோவை-பெங்களூர் விரைவுச்சாலை மற்றும் ரெயில்வே திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் என மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி மற்றும் அஸ்வினி வைஷ்ணவுக்கு கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், கோவை – பெங்களூரு நெடுஞ்சாலையை (NH-948) விரைவுச் சாலையாக விரிவுப்படுத்த வேண்டும் என்றும், விரைவுச் சாலையாக மாற்றுவதன் மூலம், கோவை – பெங்களூரு இடையேயான தூரத்தை 300 கி.மீ. ஆகவும், பயண நேரத்தை 5 மணி நேரமாகவும் குறைக்க முடியும். இதனால், கோவை மக்கள் பயனடைவார்கள்.

கோவை – பண்ணாரி நெடுஞ்சாலை முதல் கட்டமாக 96 கி.மீ. தூரத்திற்கு விரைவுச் சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த விரைவுச் சாலை திட்டத்தின் 2வது கட்டம், பண்ணாரியில் இருந்து சாம்ராஜ்நகர் வரையிலான சாலை, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் வழியாக செல்கிறது. எனவே, இந்தப் பகுதியில் வன விலங்குகள் பாதுகாப்பாக செல்ல வசதியாக, உயர் மட்ட ரயில் பாதை, சாலைகளை அமைக்கலாம்.

மூன்றாவது கட்டமாக, சாம்ராஜ்நகரில் இருந்து, மலவல்லி மற்றும் கனகபுரா வழியாக, 160 கி.மீ., 6 வழிச்சாலை அமையவுள்ளது. இது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், சிறப்பு பொருளாதாரமண்டலங்கள், சர்க்கரை ஆலைகள் என தொழில் வளர்ச்சிக்கும், விவசாயத்திற்கு பலனளிக்கும். எனவே, இந்த விரைவுச் சாலை திட்டங்களை விரைவாக முடிக்க வேண்டும் என்று கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேபோல் மத்திய ரெயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கும் கோவையிலிருந்து தென்மாவட்டங்களான திருச்செந்தூர், தூத்துக்குடி, ராமேஸ்வரம், மதுரைக்கு விரைவு ரயில் சேவையும், கோவையிலிருந்து திண்டுக்கல்லிற்கு பயணிகள் ரயில் சேவையும் உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.