புதுச்சேரிக்கு அடுத்த வாரம் குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு வருகிறார். பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறார். அவரது வருகையையொட்டி பாதுகாப்பு பணிகளை போலீஸார் அதிகப்படுத்தியுள்ளனர்.

புதுவை மாநிலத்துக்கு, குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு வரவுள்ளது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் கூட்டம் நடத்தி பாதுகாப்பு பணிகளை பலப்படுத்த உத்தரவிட்டுள்ளனர்.

வெங்கய்யநாயுடு பயணம் தொடர்பாக போலீஸ் தரப்பில் விசாரித்தபோது, ” குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு சென்னையில் இருந்து விமானம் மூலம் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.12) காலை புதுச்சேரிக்கு வருகிறார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள சூரியஓளி மின் பயன்பாட்டுத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்துக்குச் செல்கிறார். இதனையடுத்து, புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார்.

அடுத்தநாளான செப்டம்பர் 13-ம் தேதி காலை புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறும் விழாவில் பங்கேற்று, புதுச்சேரி தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தை திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து புதுவை மத்திய பல்கலைக்கழக விழாவில் பங்கேற்று, பல்கலைக் கழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள சூரிய ஓளி மின் பயன்பாட்டுத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். பின்னர் ஆளுநர் மாளிகைக்கு சென்று ஓய்வெடுகிறார். தொடர்ந்து அரவிந்தர் ஆசிரமத்துக்கு செல்ல வாய்ப்புள்ளது. அதைத்தொடர்ந்து செப்டம்பர் 14ல் புறப்படுகிறார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன” என்று குறிப்பிடுகின்றனர்.

குடியரசுத் துணைத் தலைவர் புதுச்சேரி வருகை உறுதியாகியுள்ள சூழலில், அரசு தரப்பில் முறைப்படி விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.