யுபிஎஸ் வங்கியில் பெற்ற கடன்தொகையை திருப்பிச் செலுத்தாத காரணத்தால் லண்டனில் உள்ள வீட்டை காலி செய்யுமாறு தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லண்டனில் உள்ள ரீஜன்ட்பூங்காவுக்கு எதிரில் அமைந்துள்ளது 18/19 என்ற எண்ணில் உள்ள கார்ன்வால் டெரஸ் சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பு. இதில் விஜய் மல்லையாவின் 95 வயதான தாய் லலிதா வசித்து வருகிறார்.

விஜய் மல்லையாவின் ரோஸ் கேபிடல் வெஞ்சர்ஸ் நிறுவனம் சுவிட்சர்லாந்தின் யுபிஎஸ் வங்கியில் இந்த அடுக்கு மாடிக் குடியிருப்பை அடமானமாக வைத்து கடன் பெற்றுள்ளது. கடனை திருப்பிச் செலுத்தாததால் இந்தவீட்டை ஜப்தி செய்யும் நடவடிக்கையில் யுபிஎஸ் வங்கி இறங்கியது. வங்கிக்கு அவர் செலுத்த வேண்டிய கடன் தொகை 2 கோடி பவுண்ட் ஆகும். இந்தக் கடனை திருப்பிச் செலுத்த வழங்கப்பட்ட அவகாசம் முடிவடைந்ததைத் தொடர்ந்து யுபிஎஸ் வங்கி நீதிமன்றத்தை நாடியது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி மாத்யூ மார்ஷ், இதற்கு மேலும் கால அவகாசம் வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கடன் வழங்கிய வங்கி அந்த வீட்டை தன் வசம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பளித்தார். அத்துடன் இது தொடர்பாக மேல் முறையீடு செய்ய அனுமதிக்க முடியாது என்றும் தீர்ப்பில் திட்டவட்டமாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார். வங்கியின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வழக்கு இதற்கு முன் 2019-ம் ஆண்டு மே மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது ஏப்ரல் 30, 2020 வரை அவகாசம் அளிக்கலாம் என நீதிபதி சைமன் பார்க்கர் தீர்ப்பளித்திருந்தார். கரோனா பெருந்தொற்று காலமாக இருந்ததால் இதை ஏப்ரல் 2021 வரை செயல்படுத்த முடியாத சூழல் நிலவியது.

பிறகு கடந்த ஆண்டு அக்டோபரில் யுபிஎஸ் வங்கி இதுகுறித்து வழக்கு தொடர்ந்தது. அப்போது வங்கி தேவையற்ற இடையூறு அளிப்பதாகவும், வங்கியின் ஜப்தி நடவடிக்கையை நிறுத்தி வைக்குமாறும் விஜய் மல்லையா மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் பெற்ற கடனைமல்லையா திருப்பிச் செலுத்தாதது தொடர்பாக திவால் நடவடிக்கை எடுக்க வகை செய்யும் மனுவை பாரத ஸ்டேட் வங்கி கூட்டமைப்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தாக்கல் செய்தது.

அத்துடன் நிதி மோசடி மற்றும் அந்நியச் செலாவணி மோசடி உள்ளிட்ட குற்றங்களுக்காக அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பக் கோரி அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வு அமைப்பும் தாக்கல் செய்த மனு விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here