சிவகார்த்தியேனின் ‘மாவீரன்’ படத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி பின்னணி குரல் கொடுத்திருந்த நிலையில், அதற்கு அவர் சம்பளம் வாங்கவில்லை என இயக்குநர் மடோன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்துள்ள படம் ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இதனை இயக்கியுள்ளார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். விது அய்யனார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஃபிலோமின் ராஜ் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். தமிழ், தெலுங்கில் பைலிங்குவல் படமாக வெளியாகியுள்ளது. தெலுங்கில் இந்தப் படத்துக்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் 4 நாட்களில் ரூ.50 கோடி வசூலித்து முன்னேறி வருகிறது. இந்நிலையில், படத்தில் சிவகார்த்திகேயனுக்கு மட்டுமே கேட்கும் அசரிரீ குரலாக விஜய்சேதுபதி வாய்ஸ் கேட்கும். இதற்கு குரல் கொடுத்துள்ள நடிகர் விஜய் சேதுபதி சம்பளம் வாங்கவில்லை என இயக்குநர் மடோன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், “சம்பளம் வேண்டாம் என விஜய் சேதுபதி சொல்லிவிட்டார். உனக்காகவும், சிவகார்த்திகேயனுக்காகவும் நான் இதை செய்கிறேன் என கூறி ஊதியம் வாங்க மறுத்துவிட்டார்” என தெரிவித்துள்ளார்.