நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படம் உலக அளவில் ரூ.210 கோடி வசூலை எட்டியதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த ‘வாரிசு’ படம் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த ஜனவரி 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. குடும்ப உறவுகளில் நிகழும் சிக்கல்களையும், தொழில் போட்டியையும் மையமாக கொண்டு உருவான இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். இப்படத்தை தில்ராஜு தயாரித்திருக்கிறார்.

ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, யோகிபாபு, ஷ்யாம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதல் நாள் இப்படம் ரூ.19.43 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், படம் உலக அளவில் 7 நாட்களில் ரூ.210 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமர்சன ரீதியில் வரவேற்பு இல்லை என்றாலும், வசூலில் ஓரளவு நல்ல வருவாயை ஈட்டி வருவதாக தெரிகிறது. இந்த வார இறுதி வரை திரையரங்குகள் நிறைவதற்கு வாய்ப்பு இருப்பதால், ‘வாரிசு’ படத்தின் திரையரங்க வசூல் ரூ.250 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வம்சி, தில் ராஜு நெகிழ்ச்சி: முன்னதாக, வாரிசு படக்குழுவினர், ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் விழா சென்னையில் நடந்தது. விழாவில், இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி பேசும்போது, “வாரிசு படம் அல்ல, அது நம்பிக்கை. விஜய், தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர் என் மீது வைத்த நம்பிக்கை. அந்த நம்பிக்கையை வெற்றியாக்கிய ரசிகர்களுக்கு நன்றி. இதை பலரும் தெலுங்கு படம் என்றே சொல்லி வந்தது என்னைக் கஷ்டப்படுத்தியது. இது தமிழ்ப்படம்தான். நான் தமிழ் இயக்குநரா, தெலுங்கு இயக்குநரா என்பதை தாண்டி முதலில் மனிதன். அந்தவகையில் ரசிகர்களும் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு ‘வாரிசு’ படத்தின் வெற்றியால் தங்கள் நெஞ்சில் எனக்கு இடம் கொடுத்து விட்டார்கள்” என்றார்.

தயாரிப்பாளர் தில் ராஜு பேசும்போது, “விஜய் நடித்த படங்களில் ‘பூவே உனக்காக’, ‘காதலுக்கு மரியாதை’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படங்கள் எனக்குப் பிடிக்கும். அதேபோல தெலுங்கில் ஆக் ஷன் ஹீரோக்களான ஜூனியர் என்டிஆரின் ‘பிருந்தாவனம்’, பிரபாஸின் ‘மிஸ்டர் பெர்ஃபெக்ட்’, மகேஷ்பாபுவின் ‘சீதம்மா வாகிட்லோ சிரிமல்லி செட்டு’ படங்கள் ரொம்ப பிடிக்கும். இவை மாஸ் ஹீரோக்களின் குடும்ப கதைப் படங்கள். அப்படி இந்த ‘வாரிசு’ கதையை வம்சி சொன்னதும் விஜய் நடித்தால் நன்றாக இருக்கும் என்றேன். விஜய்யுடன் ஒரே சந்திப்பிலேயே இந்தக் கதை ஓகே ஆனது” என்றார். நடிகர் விடிவி கணேஷ், பாடலாசிரியர் விவேக், இசையமைப்பாளர் தமன், சங்கீதா, ஷாம், சரத்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.