கடந்த சில நாட்களில் மட்டும் இதுபோன்று 70 வழக்குகள் பதியப்பட்டுள்ளன என டிஜிபி சைலேந்திர பாபு தகவல்.

சமீபத்தில் புதிய சைபர் குற்றம் அரங்கேறி வருவதாக தமிழ்நாட்டின் டிஜிபி சைலேந்திர பாபு வீடியோ மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, கடந்த ஆண்டில் மட்டும் 60,623 சைபர் குற்றங்களுக்காக வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த சைபர் குற்றத்தை பற்றி அந்த வீடியோவில் அவர் கூறும்போது, “சைபர் குற்றவாளிகளிடமிருந்து பொதுமக்களின் மொபைல் எண்ணிற்கு அழைப்பு வரும். அதில் பேசும் நபர், நீங்கள் வெளிநாட்டிற்கு அனுப்பிய பார்சல் திரும்பி வந்துள்ளது. இதைபற்றி மேலும் அறிய எண் 1யை அழுத்தவும் என்பது போல எண்களை அழுத்த சொல்வார்கள். பின்னர் அதை பற்றி விளக்கும் போது நீங்கள் வெளிநாட்டிற்கு அனுப்பிய பார்சலில் போதை பொருட்களும் சட்டத்திற்கு எதிரான பாஸ்போட்டும் இருப்பதால் திரும்ப வந்துள்ளது. இதனால் நாங்கள் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறோம் என கூறுவர்.

நீங்கள் இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பின்னர், நான் அப்படி செய்யவில்லை. எனக்கு அதை பற்றி எதுவும் தெரியாது என கூறினாலும், இதுகுறித்து நாங்கள் காவல்துறையுடன் இணைக்கிறோம் என கூறி வேறொரு எண்ணிலிருந்து மற்றொருவர் காவல்துறையை போலவே பேசுவர். அப்போது உங்களுடைய ஆதார் மற்றும் வங்கி பரிவர்த்தனை மூலமே இந்த போதை பொருட்கள் எல்லாம் அனுப்பப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தியே வங்கி பரிவர்த்தனை எல்லாம் நடைபெற்று உள்ளது என கூறுவர். எனவே உங்கள் மீது நாங்கள் வழக்கு பதிவு செய்கிறோம் என கூறி உங்களை விசாரணைக்கு நேரில் அழைப்பர்.

இதை நீங்கள் மறுத்தாலும், உங்களுடன் ஒரு வழக்கறிஞரை அறிமுகப்படுத்தி, அவர்கள் மூலமாக நீங்கள் இதை அணுகலாம் என கூறுவர். இந்த வழக்கறிஞர் உங்களிடம் 1 லட்ச ரூபாயய் கொடுத்தால் இந்த வழக்கிலிருந்து வெளியில் வந்துவிடலாம் என கூற, நீங்கள் ஒரு லட்சம் அனுப்பினால் இன்னும் 5 லட்சம் அனுப்பினால் எளிதாக வெளியில் வந்துவிடலாம் என கூறி உங்களை ஏமாற்றிவிடுவார்கள். கடந்த சில நாட்களில் மட்டும் இதுபோன்று 70 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இது குறித்து பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்” என கூறினார்.