கோவை: தமிழகம் முழுவதும் நாளை முதல் மேலும் 300 ஓபன் எண்ட் நூற்பாலைகள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, தமிழ்நாடு ஓபன் எண்ட் நூற்பாலை தொழில் அமைப்பினர் (ஓஸ்மா) தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ‘ஓஸ்மா’ தொழில் அமைப்பின் தலைவர் அருள்மொழி கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட ஓபன் எண்ட் நூற்பாலைகள் செயல்பட்டு வருகின்றன. தினமும் 25 லட்சம் கிலோ கிரே நூல் மற்றும் 15 லட்சம் கிலோ கலர் நூல் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு லட்சம் பேர் இத்தொழிலில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

ஓஇ நூற்பாலைகளின் முக்கிய மூலப்பொருளான கழிவுப்பஞ்சு விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த காலங்களில் பஞ்சு விலையில் 60 சதவீதம் மட்டுமே கழிவுப் பஞ்சு விலை இருந்து வந்த நிலையில் தற்போது 85 சதவீதமாக அதிகரித்துள்ளது. மொத்தம் உள்ள 600 நூற்பாலைகளில் 400 நூற்பாலைகள் ‘எல்டிசிடி’ பிரிவு மின்இணைப்பு பெற்று செயல்பட்டு வருகின்றன.

பயன்படுத்தினாலும், இல்லை என்றாலும் டிமாண்ட் கட்டணமாக மாதந்தோறும் ரூ.17,640 செலுத்த வேண்டியுள்ளது. ‘எச்டி’ மின்நுகர்வோர் ரூ. 3,46,500 செலுத்த வேண்டியுள்ளது. பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும். நிலை கட்டணமும் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஓராண்டுக்கு மேல் நெருக்கடி தொடர்வதால் ஏற்கெனவே கடந்த சில நாட்களாக பல்லடம், ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல் பட்டு வரும் 250-க்கும் மேற்பட்ட ஓஇ நூற்பாலைகள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நாளை (ஜூலை 10) முதல் ‘ஓஸ்மா’ சங்கத்தை சேர்ந்த தமிழகம் முழுவதும் உள்ள 300 கலர் மற்றும் கிரே நூல் உற்பத்தி செய்யும் நூற்பாலைகள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது.

கழிவுப்பஞ்சு விலை உயர்வுக்கு மத்திய அரசும், மின்கட்டண உயர்வு பிரச்சினைக்கு மாநில அரசும் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை உற்பத்தி நிறுத்த போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.