இந்தியாவில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 18 வயதைக் கடந்த அனைவருக்கும் 2 டோஸ் தடுப்பூசிகளை மத்திய அரசு செலுத்தி வருகிறது.

மாநில அரசுகளுக்குத் தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து இலவசமாக வழங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று வரை 98.67 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 94 கோடியாக உள்ளது. எனவே அவர்களுக்கு 2 டோஸ் தடுப்பூசியையும் செலுத்த முடிவு செய்தோம். இதற்காக தடுப்பூசிக் கொள்கையில் கடந்த ஜூன் மாதம் மாற்றம் கொண்டு வரப்பட்டது. அவ்வப்போது சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. தற்போது 99 கோடியை நெருங்கிவிட்டோம். விரைவில் இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். – பிடிஐ