ராமேசுவரம்: தனுஷ்கோடி தேசிய நெடுஞ் சாலையில் வனத்துறையினர் சார்பில் தொடங்கப்பட்ட சோதனைச்சாவடியை சுங்கச் சாவடியாக மாற்றியதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு புதிதாக தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு 27.07.2017 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் திறக்கப்பட்டது. தனுஷ்கோடி அரிச்சல்முனை வரையிலும் அமைக்கப்பட்ட இந்த சாலையில் ஆண்டுதோறும் சுமார் 2 கோடி வரையிலான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் ஆட்டோ, கார், வேன், பேருந்து உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் மூலம் வந்து செல்கின்றனர். பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு ஏற்ப அதிகளவில் பிளாஸ்டிக் கழிவுப்பொருட்களும் தனுஷ்கோடி கடற்கரையில் விட்டுச் செல்லப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் பிளாஸ்டிக் இல்லாத கடற்கரையாக தனுஷ்கோடியை உருவாக்க, தனுஷ்கோடி ஜடாயுதீர்த்தம் அருகே வனத்துறையினர் பிளாஸ்டிக் சோதனைச்சாவடியை அமைத்தனர். தனுஷ்கோடி வரும் சுற்றுலா வாகனங்களை நிறுத்தி வனத்துறையினர் பிளாஸ்டிக் பை, பாட்டில் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை தனுஷ்கோடி கடற்கரைக்கு கொண்டு செல்லக் கூடாது எனத் தடை விதித்து அதை பறிமுதல் செய்து வந்தனர்.

தற்போது வனத்துறையினர் இந்த சோதனைச்சாவடியை திடீரென சுங்கச்சாவடியாக மாற்றி தனுஷ்கோடிக்கு செல்லும் கார், வேன், பேருந்து உள்ளிட்ட அனைத்து சுற்றுலா வாகனங் களிடமும் டிக்கெட் கொடுத்து ரூ.20 கட்டணம் வசூலிக்கத் தொடங்கி உள்ளனர்.

முன்னதாக, ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நகராட்சி சுங்கச்சாவடியிலும் ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகளிடம் கார் ரூ.100, வேன் ரூ.150,கனரக வாகனம் ரூ.200 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது தனுஷ்கோடி செல்லும் வாகனங்களுக்கு 2 இடங்களில் சுங்கக்கட்டணம் வசூலிப்பது சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர் களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வாகனங்களை சோதனையிட்டு பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த வனத்துறை, தற்போது பிளாஸ்டிக் பொருட்களை பறி முதல் செய்வதைத் தவிர்த்து, கட்டணம் வசூலிப்பதில் மட்டும் கவனம் செலுத்துகிறது. இதனால் பிளாஸ்டிக் இல்லாத கடற்கரையாக தனுஷ்கோடியை உருவாக்கும் நோக்கமும் நிறைவேறாமல் போகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

தனுஷ்கோடி வனத்துறை சுங்கச்சாவடியை அகற்றிவிட்டு, கடற்கரையில் பிளாஸ்டிக்கை பயன்படுத்தாத வண்ணம் விழிப்புணர்வை அதிகப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.