ராஜபாளையம்: மதுரை – செங்கோட்டை இடையே மின்சார இன்ஜினுடன் ரயில்கள் எப்போது இயக் கப்படும் என தென்மாவட்ட மக்கள் எதிர் பார்க்கின்றனர். மதுரை ரயில்வே கோட்டத்தில் விருதுநகர் – தென்காசி, திருநெல்வேலி – தென்காசி, தென்காசி – செங்கோட்டை இடையிலான அகல ரயில் பாதை மின்மயமாக்கப்படும் என 2020-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
இதில் செங்கோட்டை – சென்னை மார்க்கத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி வழியாக பொதிகை விரைவு ரயில், சென்னை – கொல்லம் விரைவு ரயில் தினசரி சேவையிலும், சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் வாரம் 3 நாட்களும், தாம்பரம் நெல்லை – தாம்பரம் ரயில் வாரம் ஒருமுறையும் இயக்கப்படுகிறது.
இந்த விரைவு ரயில்கள் செங்கோட் டையில் இருந்து டீசல் இன்ஜினுடன் புறப் பட்டு, மதுரை அல்லது திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்டு சென்னை செல்கிறது.
மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து மின்சார இன்ஜினுடன் புறப்பட்டு மது ரையில் டீசல் இன்ஜின் மாற்றப்பட்டு செங்கோட்டை செல்கிறது. இதனால் இந்த விரைவு ரயில்கள் புறப்படுவதில் சுமார் ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், அகல ரயில் பாதையில் மின் மயமாக்கல் பணி முடிந்து திருநெல்வேலி – தென்காசி இடையே கடந்த மார்ச் 13-ம் தேதியும், செங்கோட்டை – விருதுநகர் இடையே மார்ச் 29-ம் தேதியும் மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
இது முடிந்து 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் மின்மயமாக்கல் பணியை மேற்கொண்டு வரும் ஒப்பந்த நிறுவனம் பணி களை முடிக்காததால் மின்சார ரயில் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
கடந்த மாதம் 17-ம் தேதி முதல் திருநெல்வேலி – செங்கோட்டை இடையே இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் மின் சார ரயிலாக இயக்கப்பட்டு வருகிறது. தாம்பரம் – நெல்லை ரயில் மின்சார இன்ஜின் பொருத்தப்பட்டு இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுமார்க்கத்தில் தென்காசி, ராஜபாளையம், சிவகாசி வழியாக இயக்கப் படுகிறது.
ஆனால் செங்கோட்டை – விருதுநகர் இடையே மின்மயமாக்கல் பணி பராமரிப்பு பணி நடப்பதால் இந்த ரயில் தென்காசியில் இருந்து டீசல் இன்ஜினில் இயக் கப்படுகிறது.
விருதுநகர் – செங்கோட்டை இடையே மின்சார ரயில் இன்ஜின் இயக்கப்படாததால் தென்காசி, விருதுநகர் மாவட்ட மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, தற்போது சங்கரன்கோவில் – ராஜபாளையம் இடையே சோதனை நடைபெறுகிறது. இம்மாத இறுதிக்குள் பணிகள் முடிந்து, மின்சார இன்ஜினுடன் ரயில் கள் இயக்கப்படும், என்றனர்.