மதுரையில் நடைபெறவுள்ள பொங்கல் விழாவில் பங்கேற்க வரும் பிரதமர் மோடி, ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டுமானப் பணிக்கான நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2014-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையை கடந்த மாதம் 7-ம் தேதி பிரதமர் மோடி கலந்து கொண்டு திறந்து வைத்தார். அதுபோல், 2003-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட போபால், புவனேஸ்வர், ஜோத்பூர், பாட்னா, ராய்பூர், ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனைகள் 2012-ம் ஆண்டு செயல்பாட்டிற்கு வந்தது. அதன்பிறகு 2009-ல் அறிவித்த ரேபேலி 2009-ம் ஆண்டு 2014ல் அறிவித்த மங்களகிரி (ஆந்திரா), நாக்பூர் (மகாராஷ்டிரா), பாத்யிண்டா (பஞ்சாப்), கல்யானி (மேற்கு வங்கம்) செயல்பாட்டிற்கு வந்தன.
இதன் பிறகு அறிவித்த மருத்துமவனைகளும் சேர்த்து இதுவரை நாடு முழுவதும் 18 எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன. ஆனால், 2015-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டுமானப் பணிகள் இன்னும் மதுரையில் தொடங்கப்படவில்லை. எம்பிபிஎஸ் மருத்துவ மாணவர்கள் சேர்க்கையும் தொடங்கப்படவில்லை. கட்டுமானப் பணிக்கு உரிய நிதி கூட ஒதுக்கப்படவில்லை. இவ்வளவுக்கும் பிரதமர் மோடியே நேரடியாக மதுரை தோப்பூருக்கு வந்து கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். பிரதமரே நேரடியாக வந்து அடிக்கல் நாட்டியதால் உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தற்போது வரை அந்த எதிர்பார்ப்பு நடக்கவில்லை. மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை விவகாரத்தில் கடந்த அதிமுக ஆட்சியிலும் சரி, தற்போது திமுக ஆட்சியிலும் கூட மத்திய, மாநில அரசுகளிடையே ஒருங்கிணைந்த செயல்பாடுகள் இல்லாததாலே இந்தத் திட்டம் தாமதமாகுவதாக கூறப்படுகிறது. ஜப்பான் நாட்டு நிறுவனம் நிதி ஒதுக்கீடு செய்யாதப்பட்சத்தில் நேரடியாக நிதி ஒதுக்கீடு செய்வதற்கு மாநில அரசு, மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். ஆனால், அதற்கான அழுத்தத்தை மாநில அரசு தற்போது வரை கொடுக்கவில்லை. அதன்பின் 2021 சட்டசபை தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி மதுரைக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தார்.
அப்போதும் பட்டும்படாமலே ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையை பற்றி பேசி சென்றார். அதற்கு பிறகு வரும் 12-ம் தேதி மதுரையில் நடக்கும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த விழா, ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய இடத்திலே நடக்கிறது. அதனால், பிரமர் மோடி, எய்ம்ஸ் மருத்துமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. 2018-ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒப்புதல் கிடைத்தபோது திட்டமதிப்பீடு ரூ.1,264 கோடியாக இருந்தது. தற்போது ரூ.2 ஆயிரம் கோடியை தொட்டிருக்கிறது. இன்னும் தாமதமானால் ரூ.2,500 கோடியை தொடவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.