சென்னை: வெளிச் சந்தையில் தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்த, பண்ணை பசுமை கடைகள் மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

அதிக வெயில், திடீர் கோடை மழை காரணமாக பல பகுதிகளிலும் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கிலோ ரூ.40-க்கு விற்கப்பட்டு வந்த தக்காளி பல பகுதிகளில் ரூ.120 வரை உயர்ந்துள்ளது.

திருமணம் போன்ற சுப காரியங்கள் காரணமாக தேவை அதிகரித்துள்ள நிலையில், வரத்து குறைந்துள்ளதால், இந்த விலை உயர்வு தொடர்ந்து நீடிக்கும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில், வெளிச் சந்தையில் தக்காளி விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதொடர்பாக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் பருவமழை காரணமாக வெளிச் சந்தையில் தக்காளி விலை உயர்ந்துள்ளது. இதை கட்டுப்படுத்தி, மக்களுக்கு மலிவு விலையில் தரமான தக்காளி கிடைக்க, தமிழக கூட்டுறவு துறையின் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்பனைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மழையால் வரத்து குறைவு

தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவில் தற்போது மழை பெய்து வருவதால் தக்காளி வரத்து குறைந்து, விலை அதிகரித்துள்ளது. இதனால், தக்காளி ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.120 வரை வெளிச் சந்தையில் விற்கப்படுகிறது.

இதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு துறை பண்ணை பசுமை கடைகளில் முதல் கட்டமாக மே 19-ம் தேதி முதல் 4 டன் அளவுக்கு தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு, கிலோ ரூ.70 முதல் ரூ.85 வரை விற்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, நாளை முதல் தக்காளியின் வெளிச் சந்தை விலை கட்டுக்குள் வரும் வரை அனைத்து மாவட்டங்களிலும் கூட்டுறவு துறை நடத்தி வரும் 65 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், தேவையின் அடிப்படையில் நியாயவிலைக் கடைகள் மூலமாகவும் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.