தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுடன் ஏற்பட்டுள்ள மோதல் போக்கு எதிரொலியாக கவர்னர் தமிழிசையை மாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை பாஜ ஆளும் மாநிலத்தில் கவர்னராக நியமிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. தெலங்கானா மாநில கவர்னராக தமிழ்நாட்டை சேர்ந்த டாக்டர் தமிழிசை கடந்த 1.9.2019 அன்று நியமிக்கப்பட்டார். தெலங்கானா கவர்னராக பணியாற்றிய அவருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி புதுவை துணை நிலை கவர்னர் பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டது. இரு மாநில கவர்னராகவும் தற்போது பணியாற்றி வருகிறார்.

தெலங்கானா மாநிலத்தில் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் ஆட்சி நடக்கிறது. பாஜ எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்துள்ள சந்திரசேகரராவ், கவர்னர் தமிழிசைக்கும் உரிய மரியாதை வழங்குவதில்லை என்று கூறப்படுகிறது.இந்த நிலையில் கடந்த சில மாதமாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கும், கவர்னர் தமிழிசைக்கும் இடையே கருத்து வேறுபாடும், மோதல் போக்கும் இருந்து வருகிறது. இதை நிரூபிக்கும் வகையில் அடுத்தடுத்த சம்பவங்கள் அரங்கேறின. கவர்னர் உரையுடன் தான் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குவது வழக்கம். ஆனால் அந்த மரபையே மாற்றி கவர்னர் உரை இல்லாமலேயே சட்டசபை கூட்டம் தொடங்கப்பட்டது. இதேபோல் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்ட யாதாத்ரி கோயில் திறப்பு விழாவிலும் கவர்னர் தமிழிசை புறக்கணிக்கப்பட்டார்.

இதே போல் கவர்னர் மாளிகையில் நடந்த உகாதி தின நிகழ்ச்சியில் முதல்வர் சந்திர சேகரராவ் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். முழுகு மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கவர்னர் தமிழிசை சென்ற போது அதிகாரிகள் யாரும் வரவேற்கவில்லை. இது போன்ற பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக சமீபத்தில் டெல்லி சென்றிருந்த தமிழிசை பிரதமர் மோடியையும், உள்துறை மந்திரி அமித்ஷாவையும் சந்தித்து பேசினார். அப்போது தெலங்கானா மாநில நிலவரங்கள் பற்றி விளக்கமாக கூறி இருக்கிறார். இது முதல்வர் சந்திரசேகரராவை மேலும் கோபம் அடைய வைத்துள்ளது.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருக்கும் அந்த மாநிலத்தில் தற்போதைய நிலையில் தமிழிசையை மாற்றிவிட்டு புதிய கவர்னரை நியமிக்க ஒன்றிய அரசு முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஒன்றிய அரசு ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. சுமூகமாக பணியாற்றும் வகையில் பாஜ ஆளும் மாநிலங்களில் தமிழிசை கவர்னராக நியமிக்கப்படலாம் என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. தெலங்கானா கவர்னராக கேரள ஆளுநர் ஆரிப் அகமதுகான் நியமிக்கப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே தமிழிசை கேரள மாநில கவர்னர் அல்லது புதுவைக்கு முழுநேர கவர்னராகவோ நியமிக்கப்படவும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அவசர அழைப்பின் பேரில் தமிழிசை திடீரென்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.