தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் மேகாலயாவில் நடந்த சாலை விபத்தில் மரணமடைந்தார். அசாம் மாநிலம் குவாஹாட்டியில் இருந்து ஷிலாங்குக்கு செல்லும் வழியில் அவர் பயணித்த வாடகைக் காரின் மீது லாரி மோதியதில் விபத்து நடந்தது. அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், மேகாலயா முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வா தீனதயாளன் மாநில மற்றும் தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இவர், சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் பி.காம் படித்திருக்கிறார். விஸ்வா ஜூனியர், சப் ஜூனியர் எனப் பல போட்டிகளில் கலந்து கொண்டு படிப்படியாக தன்னை நிலைநிறுத்தி இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர்.
இந்நிலையில், மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் இன்று (ஏப்.18) தொடங்கும் 83-வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக அசாம் தலைநகர் குவாஹாட்டியிலிருந்து மேகாலயா தலைநகர் ஷில்லாங் நோக்கி சென்றார்.
அப்போது, ஷாங்பங்க்ளா என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வந்த 12 சக்கரங்களுடன் கூடிய கன்டெய்னர் லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே தாறுமாறாக ஓடியது. பின்னர் டிவைடரைத் தாண்டி ஓடிய லாரி எதிர்ப்பக்கத்தில் வந்து கொண்டிருந்த கார் மீது மோதியது. இதில் காரின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விஸ்வா தீனதயாளன் நோங்போ சிவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.