சிறிய குற்றங்களுக்காக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 46 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அடிப்படை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வீ.விக்னேஸ்வரனிடம் தெரிவித்துள்ளார்.

 

 

இந்த சிறை கைதிகள் தொடர்பாக முன்னாள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வாவின் அறிக்கை கிடைக்கும் வரை காத்திருப்பதாக அமைச்சர் தன்னிடம் கூறியதாக விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை சம்பந்தமாக வெளியிடப்பட உள்ள அறிக்கை மிகவும் முக்கியமான ஒன்று. அந்த அறிக்கை வெளியிடப்படும் முன்னர்?ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நான் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என நம்புகிறேன். ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறும் வடக்கு, கிழக்கில் நடக்கும் காணி ஆக்கிரமிப்புகளை நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தோம்.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ஜனாதிபதி உறுதியளித்தார். அத்துடன் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை ரத்து செய்யவும் ஜனாதிபதி ஒப்புக்கொண்டதாக  விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.