ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் ‘பி’ பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் தென் கொரியா 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தியது.
புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 2-வது நிமிடத்திலேயே ஜப்பான் அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி அந்த அணி வீரர் நகயோஷி கென் கோல் அடிக்க ஜப்பான் 1-0 என முன்னிலை பெற்றது. இதற்கு தென் கொரியா 9-வது நிமிடத்தில் பதிலடி கொடுத்தது.
அந்த அணியின் லீ ஜங்ஜுன் பீல்டு கோல் அடித்து அசத்த ஆட்டம் 1-1 என சமநிலையை அடைந்தது. 24-வது நிமிடத்தில் லீ ஜங்ஜுன் மீண்டும் பீல்டு கோல் அடித்தார்.
இதனால் தென் கொரியா 2-1 என முன்னிலை பெற்றது. ஜப்பான் அணி போராடிய போதும் மேற்கொண்டு கோல் அடிக்க முடியாமல் போனது.
முடிவில் தென் கொரியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு இது முதல் வெற்றியாக அமைந்தது. முதல் ஆட்டத்தில் தென் கொரியா, பெல்ஜியத்திடம் வீழ்ந்திருந்தது. அதேவேளையில் ஜப்பான் 2-வது தோல்வியை பதிவு செய்தது. அந்த அணி முதல் ஆட்டத்தில் ஜெர்மனியிடம் தோல்வி கண்டிருந்தது.