இத்தாலியில் பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த மாஃபியா தலைவர் மெஸ்ஸினா டேனாரோ கைது செய்யப்பட்டுள்ளார்.

இத்தாலியின் பிரபல நகரங்களில் ஒன்றான பலேர்மோவிலுள்ள தனியார் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை எடுத்துவந்த நிலையில் மெஸ்ஸினா கைது செய்யப்பட்டிருக்கிறார். மெஸ்ஸினாவின் கைது இத்தாலியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில்,”மெஸ்ஸினா டேனாரோ தனியார் மருத்துவமனை ஒன்றில் புற்றுநோய்க்காக கிமோதெரபி சிகிச்சையை, போலி பெயரில் பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரது கைதில் கிட்டதட்ட 100 பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டனர். ” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

மெஸ்ஸினா, இத்தாலியின் மோசமான மாஃபியா கும்பலாக அறியப்படும் கோசா நாஸ்ட்ரா மாஃபியா கும்பலின் தலைவர். பல கொலைகளில் சம்பந்தப்பட்ட மெஸ்ஸினா ஆயுள் தண்டனை குற்றவாளி ஆவார். இக்கொலை குற்றங்கள் மட்டுமல்லாது போதைப் பொருள் கடத்தல் பண மோசடிகளிலும் மெஸ்ஸினா ஈடுபட்டு வந்தார்.

மெஸ்ஸினாவுக்கு டயாபோலிக் என்ற புனைப்பெயர் உண்டு. டயாபோலிக் என்றால் பிடிக்க முடியாத திருடன் என்று அர்த்தம். அந்த பெயரின் அர்த்தத்துக்கு ஏற்றவாறு பல ஆண்டுகளாக மெஸ்ஸினா இத்தாலியின் புலனாய்வு அதிகாரிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும், போலீஸாருக்கும் சவாலாக மறைந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் 30 வருட தேடுதலுக்குப் பிறகு கைது செய்யப்பட்டிருக்கிறார்