டெல்லி முனிசிபல் தேர்தல், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் என அரசியலில் தனது வளர்ச்சியை உறுதி செய்ய கடும் பிரயத்தனம் செய்து வருகிறது ஆம் ஆத்மி. அதன் ஒரு பகுதியாக அரவிந்த் கேஜ்ரிவால் அண்மைக் காலமாகவே பேசுவதெல்லாம் விவாதப் பொருளாகின்றன.
நேற்று சாமி படம்… இன்று ராமாயணக் குறிப்பு… – ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் நேற்று “இந்திய ரூபாய் நோட்டில் ஒரு பக்கம் மகாத்மா காந்தி படமும் இன்னொரு பக்கம் லக்ஷ்மி, விநாயகர் படமும் அச்சடிக்க வேண்டும்” என்று பேசி கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானார். இன்று டெல்லியில் குப்பைக் கிடங்கை பார்வையிட வந்த அவர் தன்னை ராமாயணத்தில் வரும் ஷ்ரவண் குமாருடன் ஒப்பிட்டுப் பேசினார். டெல்லியில் வயதானோரை மூத்த குடிமக்களை இலவசமாக புனித தலங்களுக்கு அனுப்பிவைத்ததாக தன்னை, ராமாயணத்தில் தன் பெற்றோரை புனித தலங்களுக்கு அழைத்துச் செல்லும் ஷ்ரவண் குமாருடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.
இன்று நடந்தது என்ன? – டெல்லி காசியாபாத்தில் உள்ள மிகப் பெரிய குப்பைக் கிடங்கிற்கு கேஜ்ரிவால் இன்று சென்றார். அப்போது அங்கு ஏற்கெனவே திரண்டிருந்த பாஜகவினர், கேஜ்ரிவாலுக்கு கருப்புக் கொடி காட்டியதுடன், அவருக்கு எதிராக கோஷங்களும் எழுப்பினர். பல ஆண்டுகளாக டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் பாஜகவின் வசம் உள்ளது. இந்நிலையில், விரைவில் டெல்லி முனிசிபல் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனை ஒட்டியே டெல்லியில் உள்ள மிகப்பெரிய குப்பைக் கிடங்குக்கு கேஜ்ரிவால் இன்று விசிட் அடித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தன்னை நோக்கி கருப்புக் கொடி காட்டிய பாஜகவினரை நோக்கி, “ஒருமுறையாவது பாஜகவினர் கட்சி எல்லைகளை மறந்து செயல்பட வேண்டுகிறேன். வாருங்கள் நாம் அனைவரும் இணைந்தே டெல்லியை சுத்தப்படுத்துவோம். டெல்லியில் உள்ள தாய்மார்கள் அனைவருக்கும் நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். உங்கள் அனைவரையும் இலவசமாக புனித தலங்களுக்கு அழைத்துச் சென்ற இந்த மகனுக்கு வாக்களியுங்கள்” என்றார்.
மாறி மாறி போராட்டம்: அரவிந்த் கேஜ்ரிவால் காசியாபூருக்கு வருவதற்கு முன்னர் பாஜகவினர், ஆம் ஆத்மி கட்சிக் கொடியை தரையில் போட்டு அடித்தும், மிதித்தும் கோஷங்கள் எழுப்பினர். தங்கள் நெஞ்சில் அடித்துக் கொண்டு “கேஜ்ரிவால் ஒழிக” என்று கோஷமிட்டனர். ஆம் ஆத்மி தொண்டர்களும் பதிலுக்கு நெஞ்சில் அடித்துக் கொண்டே “பாஜக ஒழிக” என்று கோஷமிட்டனர்.
பாஜக தொண்டர்களின் போராட்டம் குறித்துப் பேசிய கேஜ்ரிவால், “பாஜகவினரின் போராட்டம் ஆச்சரியமளிக்கிறது. பாஜக ஆளும் டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தக் குப்பைக் கிடங்கின் நிலவரத்தை அறியவே நான் வந்திருக்கிறேன். பாஜகவினர் நாங்கள் கட்டமைத்துள்ள பள்ளிகளையும், மக்கள் மருத்துவமனைகளையும் பார்க்க வந்தால் நிச்சயமாக போராட மாட்டார்கள்” என்றார். ஆனால் பாஜகவினரோ, ‘ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷனுக்குத் தேவையான நிதியை ஒதுக்குவதில்லை. நிச்சயமாக முனிசிபல் தேர்தலுக்கு முன்னதாக குப்பைக்கிடங்கு சுத்தப்படுத்தப்படும்’ என்று கூறுகின்றனர். டெல்லி முனிசிபல் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதற்குள் பாஜகவும், ஆம் ஆத்மியும் அரசியலை ஆரம்பித்துவிட்டன. இன்று நடந்தப் போராட்டங்களைப் பார்த்து சமூக வலைதளங்களில் ‘குப்பை அரசியல்’ என்று சிலர் விமர்சிக்கின்றனர்.
குமார் விஷ்வாஸ் கருத்து: அரவிந்த் கேஜ்ரிவாலின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் கருத்து தெரிவித்துள்ள அவரது முன்னாள் உதவியாளர், ” சிறுபான்மையினர் வாக்குகளுக்கு அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி, நிதிஷ் குமார் ஆகியோர் போட்டியாளர்களாக இருப்பார்கள் என்பது அவருக்குத் தெரியும். அதனால் 82 சதவீதம் உள்ள இந்துக்களின் வாக்கு வங்கியில் பாதியை கைப்பற்ற முடிந்தால் போதும், மோடி மீது உள்ள வெறுப்பினால் மீதமுள்ள சிறுபான்மையினர் வாக்குகள் தனக்கு தானாக கிடைத்துவிடும் என்பது அவருக்கு தெரியும். பத்திரிகையாளர்களும், மோடியை எதிர்ப்பிற்காக மட்டுமே அவரை கொண்டாடி வருகின்றனர். அவருக்கு, தந்தை, மனைவி, குழந்தைகள், குரு, நண்பர்கள், கொள்கை எதை குறித்தும் அக்கறை கிடையாது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. கருத்துக் கணிப்புகள் எல்லாம் பாஜகவுக்கு சாதகமாகவே இருந்தாலும் கூட டெல்லி மேலிடம் இன்னும் குஜராத் தேர்தல் பற்றி மவுனம் காக்கிறது. பஞ்சாப் தேர்தலில் வெற்றி பெற்றவுடனேயே கேஜ்ரிவால் குஜராத்தையும் கைப்பற்றுவோம் என்று சவால்விட்டார். ஆனால் அவரது சமீப கால பேச்சுக்கள் எல்லாமே பாஜகவின் பி டீம் போல் அவரை அடையாளம் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.