திமுக மகளிரணிச் செயலரும், எம்.பி.யுமான கனிமொழிநேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொள்கை உறுதி கொண்ட இளைஞர்கள், எழுச்சிமிக்க பெண்களால் கட்டமைக்கப்பட்டது திமுக. நம் கழகத்தின் அடித்தளமாக விளங்கும் இளையவர்கள் பலரை நம் கொள்கை சென்றடையவும், திமுகவில் அவர்களை உறுப்பினர்களாக இணைக்கவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த டிச.18-ம்தேதி மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தினார்.
தமிழகத்தின் மக்கள் தொகையில் கணிசமான பங்கு பெண்கள் உள்ளனர். அதிலும் நாளைய சமுதாயத்தின் சிந்தனையை வடிவமைக்கும் திறன் பெற்றவர்களாக இன்றுள்ள 18 முதுல் 30 வயதுடைய இளம் பெண்கள்உள்ளனர்.
திமுகவின் எதிர்காலத்தைஉருவாக்குவதில் இவர்களின் பங்கு இன்றியமையாதது. திமுக மையக் கோட்பாடாக விளங்கும் சமூக நீதி சிந்தனையின் வெளிப்பாடே, அரசிய லில் பெண்கள் தனக்கென உரிமைகளை உருவாக்குவதாகும்.
திமுக மகளிரணி அடுத்ததலைமுறைக்கான சுயசிந்தனை உடைய, உரிமைகளை உணர்ந்த இளம்பெண்களை உருவாக்க வேண்டும். அந்த விதத்தில் 18 முதல்30 வயதுடைய இளம் பெண்களை திமுகவில் மகளிரணி உறுப்பினர்களாக இணைத்து, அவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கும் பொறுப்புநமக்கு உள்ளது. அரசியலில்ஆர்வம் காட்டத் துடிக்கும் இளம் பெண்களுக்கு வாய்ப்புகள் அளிப்பதைத் தாண்டி, 18 முதல் 30 வயதுக்குள் உள்ள இளம் பெண்களை உறுப்பினர்களாக இணைத்து அவர்களுக்கு அரசியலின்மேல் ஈடுபாடு ஏற்பட வழிவகை செய்து திமுகவின் எதிர்காலத்துக்கான அடித்தளம் வலுவாக உள்ளதை உறுதி செய்வோம்.
இந்த முக்கியமான முயற்சியை நீங்கள் அனைவரும் இன்றே தொடங்கி, அதில் ஏற்படும் முன்னேற்றங்கள் மற்றும் தகவல்களை மகளிரணி தலைமையுடன் தினமும் பகிரவேண்டும்.