சென்னை: முன் விரோதத்தில் தாயாரின் கண்முன்பாகவே வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அப்பு என்ற ஆகாஷ் (26). கடந்த 2014 ஏப்.27-ம் தேதி குடிபோதையில் காலி மதுபாட்டிலை சுவற்றில் வீசியுள்ளார்.
அப்போது அந்த பாட்டில் சிதறி அவ்வழியே சென்ற பி.சுகுமார் (24) மீது விழுந்துள்ளது. இதை சுகுமாரின் நண்பர்களான பி.குப்பன் (24), எம்.பழனிவேல் (23), கே.ராஜா (22) ஆகியோர் தட்டிக்கேட்டதால் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்புவின் தாயார் தீபா, அவர்களைசமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார்.
அன்றிரவு மீண்டும் அப்புவின் வீட்டுக்கு வந்த சுகுமார், குப்பன், பழனிவேல், ராஜா ஆகியோர், கொஞ்சம் தனியாக பேச வேண்டும் வா என கூறி அப்புவை அழைத்துள்ளனர். அதற்கு அப்புவின் தாயார், எதுவாக இருந்தாலும் தனது முன்பாகவே பேச வேண்டும் என கூறியுள்ளார்.
அப்போது, அப்புவை அவரது தாயார் முன்பாகவே 4 பேரும் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இதுதொடர்பாக அப்புவின் தாயார் அளித்த புகாரின் பேரில் புதுவண்ணாரப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சென்னை 4-வது கூடுதல் அமர்வுநீதிமன்றத்தில் நீதிபதி டி.வி.ஆனந்த் முன்பாக நடந்தது. விசாரணையின்போது சுகுமார் கடந்த 2016-ம் ஆண்டு இறந்துவிட்டதால், அவர் மீதான வழக்கு மட்டும் கைவிடப்பட்டது. அரசு தரப்பில் கூடுதல்சிறப்பு வழக்கறிஞர் டி.ரவிக்குமார் ஆஜராகி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிடி.வி.ஆனந்த், கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட குப்பன், பழனிவேல், ராஜா ஆகிய 3 பேருக்கும் ஆயுள்தண்டனை மற்றும் தலா ரூ.1,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.