இந்தியாவில் கரோனா தடுப்பூசி போடுவதில் தமிழகம் 9-வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் முதல் இடத்தையும் குஜராத் 2-வது இடத்தையும், மகாராஷ்டிரா 3-வது இடத்தையும் பிடித்துள்ளன.

இந்தியாவில் கரோனா பரவலைதடுக்க கோவேக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் போடப்பட்டுவருகிறது. முதலில் முன்களப் பணியாளர்களுக்கும், கடந்த 1-ம் தேதிமுதல் 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணிதொடங்கியது.

தமிழகத்தில் 1,300-க்கும் மேற்பட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் ரூ.250 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்றுமீண்டும் அதிகரிப்பதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்துமாறு மாநிலஅரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனாலும், மற்ற மாநிலங்களைவிட, தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது எனமத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையில், “மார்ச் 7-ம்தேதி (நேற்று) காலை 7 மணி நிலவரப்படி நாடு முழுவதும் இதுவரைமுதல் தவணையாக 1 கோடியே71 லட்சத்து 68,303, இரண்டாம்தவணையாக 37 லட்சத்து 54,041 என 2 கோடியே 9 லட்சத்து 22,344டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ராஜஸ்தானில் 21.31 லட்சம், குஜராத்தில் 17.65 லட்சம், மகாராஷ்டிராவில் 17.44 லட்சம்,உத்தர பிரதேசத்தில் 17.12 லட்சம், மேற்கு வங்கத்தில் 15.81 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தமிழகம் 9-வது இடத்தில் உள்ளது. இதுவரை இங்கு 8 லட்சத்து 48,076 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “தமிழகத்தில் காவல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் முன்களப் பணியாளர்கள் குறைவான அளவிலேயே தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். அனைவரும் ஆர்வமாக போட்டுக் கொள்ள வேண்டும். விரைவில் தடுப்பூசி போடுவதில் தமிழகம் முதலிடம் பிடிக்கும்” என்றனர்.