சென்னை: சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தை அதற்காக மட்டும் பயன்படுத்துங்கள், புகழ்வதற்கோ, அல்லது பெருமைப்படுத்தி பேசுவதற்கோ பயன்படுத்தி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக சட்டப்பேரவை நேற்று மீண்டும் கூடியது. இரண்டாவது நாளான இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது. இதற்கு துறையின் அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்து, புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார். தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்கியது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழக அமைச்சர்கள் பதிலளித்தனர்.

அப்போது கேள்வி கேட்பதற்காக எழுந்த திமுக சட்டப்பேரவை உறுப்பினார் சண்முகைய்யா, இந்தியாவிலேயே சிறந்த முதல்வர், தமிழக மக்களின் பாதுகாவலரும், தமிழ் மொழியின் பாதுகாவலரும், முன்னாள் முதல்வர் கருணாநிதியால் உழைப்பு, உழைப்பு என்று பாராட்டைப் பெற்றவரும், அரசியலின் பேரொளியும், சட்டத்தின் போராளியும், திமுக தலைவரும், தமிழகத்துக்கு விடியலைத் தந்த முதல்வர் அவர்களுக்கு ,முதல்வரால் தூத்துக்குடி மாவட்டத்துக்கு என்று பேசிக்கொண்டிருந்த போது…

குறுக்கிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், ” நான் ஏற்கனவே பலமுறை எதிர்கட்சி வரிசையில் இருந்தபோதும், ஆளுங்கட்சியில் இருக்கும்போதும் நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பது, கேள்வி நேரத்தை அதற்காக மட்டும் பயன்படுத்துங்கள். புகழ்வதற்கோ, அல்லது பெருமைப்படுத்தி பேசுவதற்கோ பயன்படுத்தி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

மீண்டும், ஆளுங்கட்சியைச் சேர்ந்த திமுகவின்சட்டப்பேரவை உறுப்பினர்களை வலியுறுத்தி, வற்புறுத்திக் கேட்டுக்கொள்ள விரும்புவது, கேள்வி நேரத்தில் வேறு எதைப் பற்றியும் பேசாமல், புகழ்ந்து கொண்டிருக்காமல் கேள்வியை மட்டும் கேளுங்கள் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.