‘ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0’ மூலம் ரயில்களில் கடத்தி வரப்பட்ட 165 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே டிஎஸ்பி குணசேகரன் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் கஞ்சா கடத்தலை முழுமையாக தடுக்க ‘ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0’ மூலம் மாநிலம் முழுவதும் கஞ்சா சோதனை நடத்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதன்படி, கடந்த மார்ச் 28-ம் தேதி முதல் வரும் 27-ம் தேதி வரை “ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0” தேடுதல் வேட்டை மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

அதனடிப்படையில், தமிழகம் முழுவதும் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து வரும் ரயில்கள் மூலம் போதைப் பொருள் கடத்துவதை தடுக்கும் நடவடிக்கையாக ரயில்வே காவல் துறையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், இதுவரை 165 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள் ளதாக ரயில்வே காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ரயில்வே டிஎஸ்பி குணசேகரன், செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தமிழகத்தில் ஆப்ரேஷன் கஞ்சா வேட்டையில், தமிழக ரயில்வே காவல் துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில், சேலம் ரயில்வே காவல் உட்கோட்ட எல்லைக்கு உட்பட்ட ஜோலார்பேட்டை, காட்பாடி, தருமபுரி, ஓசூர் மற்றும் சேலம் ஆகிய ரயில்வே காவல் எல்லை பகுதிகளில், தினசரி 5 ரயில்வே காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனி குழு அமைக்கப்பட்டு கடந்த மாதம் 28-ம் தேதி முதல் அனைத்து ரயில்களிலும் தீவிர கண்காணிப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் அனைத்து ரயில்களிலும் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே காட்பாடி, ஜோலார்பேட்டை மற்றும் சேலம் வழியாக சென்ற அனைத்து ரயில்களிலும் இன்று (நேற்று)வரை சோதனை செய்ததில், இதுவரை 165 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதன் மூலம் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல, தமிழகத்தில் தடை செய்யப்பட்ட போதை வஸ்த்துக்களான ஹான்ஸ், குட்கா, பான்பராக், மாவா என 43 கிலோ போதை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு, 3 வழக்குகளில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரயில்களில் கடத்திவரப்பட்ட 40 லிட்டர் வெளிமாநில சரக்கு பாட்டில் பறிமுதல் செய்து 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதன் மூலம் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆக மொத்தம் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கடந்த 16 நாட்களில் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், தமிழகத்தில் புதிதாக புழக்கத்தில் வந்துள்ள போதை சாக்லெட் 23 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வரும் 27-ம் தேதி வரை வெளி மாநிலங்களில் இருந்து வரும் அனைத்து ரயில்களிலும் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள ரயில்வே காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.