‘வலிமை’ படத்தில் அஜித்தின் தோற்றத்துக்குப் பாராட்டு தெரிவித்ததால், சமூக வலைதளத்தில் சர்ச்சையில் சிக்கினார் சாந்தனு.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் ‘வலிமை’. ஜூலை 11-ம் தேதி இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை வெளியிடப்பட்டன. இதற்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

யூடியூபில் ‘வலிமை’ மோஷன் போஸ்டர் 10 மில்லியன் பார்வைகளைக் கடந்தது. இதனைக் கொண்டாடும் விதமாக ‘வலிமை’ படக்குழுவினர் அஜித்தின் புதிய புகைப்படத்தை வெளியிட்டார்கள். இதில் ரேஸ் பைக்கின் மீது அஜித் அமர்ந்திருப்பது போன்று இருந்ததால் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலானது.

இந்தப் புகைப்படத்தை சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “தல இந்தப் புகைப்படத்தில் சூப்பர் ஸ்மார்ட்டாக இருக்கிறார்” என்று பதிவிட்டார். சாந்தனு தீவிரமான விஜய் ரசிகர் என்பதால், அஜித் ரசிகர்கள் அவரைக் கடுமையாகக் கிண்டல் செய்யத் தொடங்கினார்கள். மேலும், சிலர் சாடவும் செய்தார்கள்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

“ட்விட்டரில் எது பேசினாலும் தவறாகிறது. நல்ல விதமாகச் சொன்னாலும் தவறாக அர்த்தம் செய்து கொள்கின்றனர். நான் சொன்னதைத் திரித்துப் பேசுகிறார்கள். எனவே, எனது முந்தைய ட்வீட்டில் சொன்னதை மீண்டும் வார்த்தைகள் மாற்றிச் சொன்னேன். ஒரு நல்ல விஷயம் சொன்னாலும் அதை யோசித்து யோசித்துத்தான் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். சமூக ஊடகம் மிகவும் ஆபத்தானதாகிவிட்டது. எப்படியோ, எனக்குத் தலயின் தோற்றம் பிடித்திருந்தது. அதனால் ட்வீட் செய்தேன்.”

#Valimai | #Ajith | #AjithKumar | #Shanthanu | #NewsUpdate | #MetroPeople