புதிய படம் ஒன்றை அமீர் – யுவன்சங்கர் ராஜா இருவரும் இணைந்து வெளியிட உள்ளதாக இயக்குநரும் நடிகருமான அமீர் தெரிவித்துள்ளார்.

‘மௌனம் பேசியதே’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அமீர். தொடர்ந்து, ‘ராம்’, ‘பருத்தி வீரன்’, ‘ஆதி பகவான்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். இதனிடையே நடிப்பிலும் கவனம் செலுத்திய அமீர் ‘யோகி’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து அதனைத் தயாரித்தும் இருந்தார். பின்பு ‘யுத்தம் செய்’, ‘வட சென்னை’, உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது ‘உயிர் தமிழுக்கு’ என்ற அரசியல் கதையை மையமாகக் கொண்ட படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைக்கிறார். இதையடுத்து ‘இறைவன் மிகப் பெரியவன்’ என்ற படத்தை இயக்கவுள்ளதாக கடந்த வருடம் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், யுவன் ஷங்கர் ராஜா மற்றும் அமீரும் இணைந்து புதிய படத்தை வெளியிட உள்ளனதாக அமீர் தெரிவித்துள்ளார். இதில் அமீர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத் தலைப்பு மற்றும் தொழில் நுட்பக் கலைகள் மற்றும் நடிகர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.