சென்னை: நடிகை கங்கனா ரனாவத் இந்தியில் ‘எமர்ஜென்சி’ படத்தை இயக்கி நடித்துள்ளார். பீரியட் படமான இதில் அவர் இந்திரா காந்தியாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசர் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து அவர் பி.வாசு இயக்கத்தில் ‘சந்திரமுகி 2’ படத்தில் நடித்துள்ளார். இதில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இதையடுத்து அவர் மீண்டும் ஒரு தமிழ்ப் படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதை அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிக்கிறது.
இந்தப் படத்தில் மாதவன் நாயகனாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இப்போது விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படத்தை மலையாள இயக்குநர் விபின் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் உருவாக இருக்கிறது. சைக்காலஜிக்கல் திரில்லர் படமான இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்று கூறப்படுகிறது.