தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும், யார் முதல்வராக வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அளவுக்கான செல்வாக்கு படைத்தவர் மணல் மாஃபியா தாதாவான ஏஜிஆர் (சிலம்பரசன்). திடீரென ஒருநாள் தமிழகத்தின் முதல்வர் கடத்தப்பட்டு காணாமல் போகிறார். அவரைக் கடத்தியது யார் என்ற விசாரணையில் சிபிஐ தீவிரம் காட்ட, ஏஜிஆர் மீது சந்தேகம் திரும்புகிறது. அதற்காக அன்டர் கவர் போலீஸ் அதிகாரி ஒருவர், ஏஜிஆர் கேங்கில் இணைந்து உளவு பார்க்கிறார். இறுதியில் முதல்வரை கடத்தியது யார்? அவரை கடத்த என்ன காரணம்? சிம்புவின் பின்னணி என்ன? – இதுதான் திரைக்கதை.
கன்னடத்தில் வெளியான ‘மஃப்டி’ படத்தின் திரைக்கதையில் பல்வேறு மாற்றங்களை அரங்கேற்றி இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஒபிலி.என்.கிருஷ்ணா. அன்டர் கவர் ஆஃபீசரின் வழியாக கேங்க்ஸ்டர் ஒருவரின் வாழ்க்கையை ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்து, கதையை முன்னோக்கி எடுத்துச் சென்ற விதம் சுவாரஸ்யம். முதல்வர் கடத்தப்படுவது, அதைத் தொடர்ந்து அவரைத் தேடும் பணிகளை முடுக்கிவிடுவது, விசாரணை, ஏஜிஆர் குறித்த பில்டப்புகள் என படத்தின் முதல் பாதி பெரிய அளவில் அயற்சித் தட்டாமல் விறுவிறுப்பாகவே கடக்கிறது. ‘விக்ரம்’ படத்தில் கமலைத் தேடும் ரசிகர்களின் கண்களைப்போல, இந்தப் படத்தில் ரசிகர்களின் கண்கள் சிம்புவை திரையில் துழாவுகின்றன. அவர்களின் ஏக்கத்தை பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இடைவேளைக்கு முன்பான சிம்புவின் ‘மாஸ்’ இன்ட்ரோ, அவரது ரசிகர்களின் பசித்திருந்த கண்களுக்கான பர்ஃபெக்ட் திரைத்தீனி.
குறிப்பாக அவரின் ‘கெத்தான’ நடைக்கும் கம்பீரத்துக்கும் ஏற்றார்போல எழுதப்பட்டுள்ள “மண்ண ஆள்றவனுக்கு தாம்ல எல்ல.. மண்ண அள்ற எனக்கு அது இல்ல”, ‘‘நல்லவனா இருக்க கெட்ட முகம் ஒண்ணு தேவப்படுது”, “எலிய பயங்காட்ட சிங்கம் ஏன் ஊர்லவம் போகணும்” போன்ற வசனங்கள் ஷார்ப். படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் ஃபாருக் பாஷா ஒளிப்பதிவும், ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசையும் இணைந்து காட்சிகளில் கண்களை கட்டிப்போடுகின்றன. ‘நினைவிருக்கா’, ‘அக்கறையில’ பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.
படத்தில் சிக்கலே அதன் இரண்டாம் பாதியிலிருந்து தொடங்குகிறது. தமிழக முதல்வரை தீர்மானிக்கும் அளவுக்கு ஏஜிஆர் உருவானது எப்படி என்பதில் தெளிவில்லாதது, கவுதம் கார்த்திக் – ப்ரியா பவானி சங்கர் பிரிவதற்கு சொல்லப்படும் பலவீனமான காரணம், சிம்புவை நல்லவராக காட்ட வைக்கப்படும் டெம்ப்ளேட் சீன்ஸ், ஒட்டாத எமோஷனல் காட்சிகள், தேவைக்கு அதிகமான கதாபாத்திரங்கள், கேங்க்ஸ்டர் ஒருவர் மக்களுக்கு நல்லவராகவும், காவல் துறைக்கு குற்றவாளியாகவும் இருக்கும் பழைய ஃபார்மெட், மணல் மாஃபியாவை நியாயப்படுத்த சிம்பு சொல்லும் காரணம், அவருக்கும் தங்கைக்குமான எமோஷனல் காட்சிகள் சரிவர கனெக்ட் ஆகாதது உள்ளிட்டவை படத்தின் விறுவிறுப்புக்கு ஸ்பீட் ப்ரேக்.
சால்ட் அண்ட் பெப்பர் தாடியும், கறுப்பு வேட்டி – சட்டையுமாக கதாபாத்திரத்திற்கான கெட்டப்பில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் சிம்பு. வாயில் கத்தியுடன், வேட்டியை மடித்துக் கட்டும் இறுதிக் காட்சி சண்டைக்காட்சி, அவரது ரசிகர்களுக்கான கூஸ்பம்ப்ஸ் தருணங்கள். தேவைக்கு அதிகமாக பேசாத, முகபாவனைகளால் உணர்ச்சிகளை கடத்தும் கதாபாத்திரத்தில் கவுதம் கார்த்திக்கின் நடிப்பு தனித்து தெரிகிறது. அவருக்கான கரியரில் முக்கியமான படம் என சொல்லும் அளவிற்கான நடிப்பை வெளிப்படுத்துகிறார். ப்ரியா பவானி ஷங்கர், கௌதம் வாசுதேவ் மேனன் எல்லைக்குள் நடித்துள்ளனர். இவர்களைத் தவிர்த்து, டீஜே, அனு சிதாரா, கலையரசன், சந்தோஷ் பிரதாப், ரெடின் கிங்க்ஸ்லி, மனுஷ்யபுத்திரன், சென்ராயன், மது குருசாமி தேவைக்கேற்ற நடிப்பை வெளிப்படுத்துகின்றனர்.
மொத்தத்தில் ‘பத்து தல’ சிம்பு ரசிகர்களுக்கான முழுமையான ட்ரீட்டாகவும் இல்லாமல்,வெகுஜன ரசிகர்களுக்கான படமாகவும் இல்லாமல், நடுவில் சிக்கியிருக்கிறது.