முதல்வராகப் பொறுப்பேற்றபின் முதன்முறையாக திமுக நிறுவனர் அண்ணா பிறந்து வாழ்ந்த காஞ்சிபுரம் இல்லத்திற்கு முதல்வர் ஸ்டாலின் சென்றார். நினைவு இல்லத்தைச் சுற்றிப் பார்த்தபின் நினைவுக் குறிப்பேட்டில் குறிப்பு எழுதிவிட்டுச் சென்றார்.
முதல்வராகப் பொறுப்பேற்றபின் முதல் முறையாக காஞ்சிபுரத்துக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றார். அவரை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வரவேற்றார். பின்னர் அவர் அண்ணா நினைவு இல்லத்துக்குச் சென்றார். அவரை மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி. இருவரும் புத்தகம் பரிசளித்து வரவேற்றனர். அண்ணா நினைவு இல்லத்தைப் பார்வையிட்ட ஸ்டாலின், அங்கிருந்த அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.
அண்ணா பிறந்த இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்பட்டு, அவர் குறித்த அனைத்து நிகழ்வு சம்பந்தப்பட்ட புகைப்படங்கள், அவர் எழுதிய புத்தகங்கள், அவர் பயன்படுத்திய பொருட்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன.
அவற்றை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் அவர் அங்குள்ள குறிப்பேட்டில் தான் வருகை தந்தது குறித்துப் பதிவு செய்தார். பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
”கரோனா என்கிற தொற்று தொடர்ந்த காரணத்தால் ஊரடங்கு இருந்த காரணத்தால் வர இயலவில்லை. காஞ்சிபுரத்துக்கு வருகை தந்து அண்ணாவின் இல்லத்தில், அவர் வாழ்ந்த இல்லத்தில் வாழ்த்துகளைப் பெற வேண்டும் என்று நான் கருதிக் கொண்டிருந்தேன். அதற்கான வாய்ப்பு இன்று கிடைத்தது.
எனவே, அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு எங்களை ஆளாக்கிய கருணாநிதியை உருவாக்கிய அண்ணாவின் இல்லத்தில் வந்து மரியாதை செலுத்தியுள்ளேன். குறிப்பேட்டில் எழுதியுள்ளேன். மக்களிடம் செல், மக்களுக்காகப் பணியாற்று, மக்களோடு மக்களாக வாழ் என்று தம்பிமார்களுக்கு அவர் ஆலோசனை வழங்கிக் கொண்டிருப்பவர்.
ஆகவே, அதை நினைவுபடுத்தி, குறிப்பேடு புத்தகத்தில் அதை எழுதிவைத்து, அண்ணா தந்த அறிவுரைப்படி இந்த ஆட்சி பீடு நடைபோடும் என்று நான் எழுதியுள்ளேன்”.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
பின்னர் ஸ்ரீபெரும்புதூரில் கார் தொழிற்சாலை அதிபர்களுடன் நடக்கும் பேச்சுவார்த்தைக்காகப் புறப்பட்டுச் சென்றார்.