மே 1 முதல் ஜூன் 15 வரை மொத்தம் 5 கோடியே 86 லட்சத்து 29 ஆயிரம் டோஸ்கள், மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளதாவது

மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் மற்றும் அவற்றின் கையிருப்பு நிலவரம், உற்பத்தியாளர்களிடமிருந்து மாநிலங்களும், தனியார் மருத்துவமனைகளும் நேரடியாகக் கொள்முதல் செய்வதற்கான எண்ணிக்கை போன்ற தகவல்களைக் கடந்த இரண்டு வார காலமாக மத்திய சுகாதார அமைச்சகம் முன்கூட்டியே வெளியிட்டு வருகிறது.

தொடர்ந்து, மே மற்றும் ஜூன் மாதத்தின் முதல் இரண்டு வார காலத்திற்கு இந்திய அரசிடமிருந்து (இலவசமாக) மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசியின் டோஸ்கள் (கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின்), மே மற்றும் ஜூன் மாதங்களில் மாநிலங்களும் தனியார் மருத்துவமனைகளும் நேரடியாகக் கொள்முதல் செய்வதற்கான எண்ணிக்கை போன்ற தகவல்களை மத்திய அமைச்சகம் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் தெரிவித்துள்ளது.

இவ்வாறு முன்கூட்டியே தெரிவிக்கப்படுவதால், மாநிலங்கள் உரிய திட்டத்தை வகுப்பதற்கு ஏதுவாக இருக்கும்.

மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலின் படி, மே 1 முதல் ஜூன் 15 வரை மொத்தம் 5 கோடியே 86 லட்சத்து 29 ஆயிரம் டோஸ்கள், மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் இலவசமாக வழங்கப்படும்.

கூடுதலாக, தடுப்பூசி உற்பத்தியாளர்களிடமிருந்துக் கிடைத்தத் தகவல்களின் அடிப்படையில் ஜூன் மாத இறுதி வரை 4 கோடியே 87 லட்சத்து 55 ஆயிரம் டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நேரடிக் கொள்முதலுக்கு வழங்கப்படும்.

கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை நேர்மையாகவும் முறையாகவும் முன்னெடுத்துச் செல்லும் வகையில் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் கீழ்க்காணும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன:

1. தடுப்பூசிகளை செலுத்துவதற்காக, கோவிட் தடுப்பூசி மையங்களின் மாவட்ட வாரியான திட்டத்தைத் தயாரித்தல்.

2. இத்தகைய திட்டம் பற்றி பெருவாரியான மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பல்வேறு ஊடகத் தளங்களைப் பயன்படுத்துதல்.

3. மாநில அரசுகள் மற்றும் தனியார் தடுப்பூசி மையங்கள், தங்களது தடுப்பூசி அட்டவணையை முன்கூட்டியே கோவின் டிஜிட்டல் தளத்தில் வெளியிடுதல்.

4. மாநில மற்றும் தனியார் தடுப்பூசி மையங்கள், ஒரு நாளுக்கான தடுப்பூசி அட்டவணை வெளியிடுவதைத் தவிர்த்தல்.

5. தடுப்பூசி மையங்களில் கூட்ட நெரிசல் இல்லாமல் பார்த்துக் கொள்ளுதல்.

6. கோவின் தளத்தின் வாயிலான முன்பதிவு சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்தல்.

ஜூன் 15-ஆம் தேதி வரை செலுத்தப்படவுள்ள தடுப்பூசிகள் பற்றிய திட்ட அறிக்கையை தயார் செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.