திருநெல்வேலி: கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக, திருநெல்வேலி மக்களவை தொகுதி திமுக உறுப்பினர் சா.ஞானதிரவியம் மீதான அடுக்கடுக்கான புகார்களை அடுத்து, அவருக்கு கட்சித் தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திருநெல்வேலி சிஎஸ்ஐ திருமண்டல நிர்வாகத்தில் இருதரப்பினரிடையே மோதல் இருந்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்குமுன் சிஎஸ்ஐ பேராயர் பர்னபாஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அவருடனும், அவரது ஆதரவாளர்களுடனும் ஞானதிரவியம் மோதலில் ஈடுபட்டு, கடுமையான வார்த்தைகளை பிரயோகித்தது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் பரவியிருந்தது. கடந்த சில நாட்களுக்குமுன் சிஎஸ்ஐ திருமண்டல அலுவலகத்தில் ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தின. இதுபோல் பல்வேறு புகார்கள் திமுக எம்.பி. மீது முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், அவரிடம் விளக்கம் கேட்டு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:

திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி திமுக உறுப்பினர் சா.ஞானதிரவியம், கழக வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும், கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாகவும் தலைமைக் கழகத்துக்கு புகார் வரப்பெற்றுள்ளது. அவரது செயல், கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் உள்ளதால், இது குறித்த அவரது விளக்கத்தையும், செயல்பாடுகளையும் இக்கடிதம் கிடைத்த 7 நாட்களுக்குள் தலைமை கழகத்துக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவிக்க தவறும் பட்சத்தில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.