முதல்வர் ஸ்டாலின் வரும் 17ஆம் தேதி டெல்லி செல்கிறார். ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக பிரதமரைச் சந்திக்கிறார். அப்போது தடுப்பூசி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்க உள்ளதாகத் தெரிகிறது.

சட்டப்பேரவைத் தேர்தல் ஏப் 6ஆம் தேதி முடிந்து மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டதில் திமுக பெரும்பான்மை பெற்று ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்தது. பொறுப்பேற்றவுடன் கரோனா தொற்று எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நிலையில் அரசு இருப்பதால் வேறு பணிகள் எதிலும் அரசு ஈடுபடவில்லை.

தடுப்பூசி, செங்கல்பட்டு தடுப்பூசி மையம், ஆக்சிஜன் தேவை, ரெம்டெசிவிர் மருந்து, எழுவர் விடுதலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்துப் பிரதமருக்கு முதல்வர் என்கிற முறையில் ஸ்டாலின் கடிதம் எழுதினார். சமீபத்தில் மாநிலங்களுக்குத் தடுப்பூசி இலவசம் என அறிவித்ததை வரவேற்றும் கடிதம் எழுதியிருந்தார். முதல்வராகப் பதவி ஏற்பவர்கள் டெல்லி சென்று பிரதமரைச் சந்திப்பது மரபு.

முதல்வராகப் பொறுப்பேற்றபின் திருச்சியில் முதன்முறையாகப் பேட்டி அளித்த ஸ்டாலின், டெல்லி செல்வீர்களா என்கிற கேள்விக்கு, ”தற்போது கரோனா தொற்று அதிகம் இருக்கிற காரணத்தால் எங்கள் முதல் பணி கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது மட்டுமே. தொற்றுப் பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டபின் கண்டிப்பாக டெல்லி செல்வேன். பிரதமரைச் சந்தித்து தமிழகத்துக்கான உரிமைகளைக் கேட்டுப் பெறுவேன்” என்று பதில் அளித்தார்.

இந்நிலையில் தற்போது கரோனா தொற்று பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வரும் 21ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. அதற்கு இடையில் டெல்லி சென்று பிரதமரைச் சந்திக்க முடிவு செய்தார் முதல்வர் ஸ்டாலின். ஜூன் 17ஆம் தேதி சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும், பிரதமர் ஒத்திசைவு கொடுத்தால் சந்திப்பேன் என்றும் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிலையில் ஜூன் 17ஆம் தேதி அன்று முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் பிரதமரைச் சந்திக்க உள்ளதாக அதிகாரபூர்வத் தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 16ஆம் தேதி இரவு டெல்லி செல்லும் முதல்வர் ஸ்டாலின், ஜூன் 17ஆம் தேதி அன்று காலை பிரதமரை நேரில் சந்திக்கிறார். பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்திக்கிறார். அதன்பின் டெல்லியில் கட்டப்பட்டு வரும் அறிவாலயம், கட்சி அலுவலகப் பணிகளையும் பார்வையிடுகிறார். அன்று மாலை சென்னை திரும்புகிறார்.

பிரதமரைச் சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்துக்கான கோரிக்கைகளை முன்வைக்க உள்ளார். தடுப்பூசி, செங்கல்பட்டு தடுப்பூசி மையம் விவகாரம், கருப்புப் பூஞ்சைக்கான கூடுதல் மருந்துகள் ஒதுக்கீடு, தமிழகத்துக்கான ஜிஎஸ்டி தொகை, நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு உள்ளிட்ட தமிழகம் சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் குறித்து அப்போது பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் பேசுவார் எனத் தெரிகிறது.