சென்னையை அடுத்த கண்ணகி நகரில் ஊரடங்கை மீறி பட்டா கத்தியில் கேக் வேட்டி பிறந்தநாள் விழா கொண்டாடிய காணொலி வெளியானதை அடுத்து போலீஸார் விசாரணை நடத்தி 6 பேரை கைது செய்தனர்.

கரோனா தொற்று பரவல் இரண்டாவது அலை பரவல் காரணமாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. பொது இடங்களில் மக்கள் கூடுவது, முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்டவைகளை கடுமையாக அமல் படுத்தி வருகிறது.

இதை மீறுவோர் மீது அபராதமும், கடும் நடவடிக்கையாக தொற்றுப்பரவல் சட்டம் 269, 270 யும் ஐபிசி 188-ன் கீழும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கரோனாவை கட்டுபடுத்த தமிழக அரசு ஊரடங்கை அறிவித்து நடைமுறைப்படுத்தினாலும் அரசின் எச்சரிக்கையை அலட்சியம் செய்வது பலரது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் கரோனா விதிகளை மீறியும், சட்டத்துக்கு புறம்பாக ஒன்று கூடி பட்டாக்கத்தியுடன் கேக் வெட்டி பிறந்த நாளைக்கொண்டாடிய 6 இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். பிறந்த நாளை கொண்டாடி காணொலியில் எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பிய அவர்கள் அதே காணொலியினால் சிக்கினர்.

கடந்த ஜூன் 6 -ம் தேதி அன்று கண்ணகி நகர் காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட கண்ணகி நகர் இரண்டு அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் சுனில் என்பவர் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இவரது பிறந்த நாளில் 15-க்கும் மேற்பட்ட நண்பர்கள் கூடி சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது கேக்கை வைத்தை 3 அடி நீள பட்டாக்கத்தியால் கேக்கை வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார்.

அதை காணொலியாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர். இந்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது, இதுகுறித்த தகவல் கண்ணகி நகர் போலீஸாருக்கு சென்றது. காணொலியை வைத்து விசாரணை நடத்திய போலீஸார் பட்டாக்கத்தியில் கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடிய சுனில் அவரது நண்பர்கள் 6 பேரை கைது செய்தனர். கைதானவர்கள் விவரம் வருமாறு:

1)சுனில்

2)நவீன்குமார் (எ) தொப்பை

3)அப்பு

4)தினேஷ்

5) ராஜேஷ்

6)கார்த்திக் (எ) பீடி

கைது செய்யப்பட்ட 6 பேரையும் விசாரணைக்குப் பின் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பட்டாக்கத்தியில் கேக் வெட்டி கொண்டாடும் கலாச்சாரம் கடந்த சில ஆண்டுகளாக பரவி வருகிறது. முதன் முதலில் பினு என்கிற ரவுடி பட்டாக்கத்தியில் கேக் வெட்டி கொண்டாடி சிக்கினார். அதன் பின்னர் இதை பலரும் செய்து போலீஸில் சிக்கி வருகின்றனர்.

திருவேற்காட்டில் சில ஆண்டுக்கு முன் புதுமாப்பிள்ளை ஒருவர் இதேப்போன்று கேக் வெட்டிக் கொண்டாடி மறுவீடு போகும் முன் நண்பர்களால் கைதாகி மாமியார் வீட்டுக்குச் சென்றார்.

கடந்த சில மாதங்களாக கரோனா தொற்று பரவி வரும் இச்சூழலில் இதுபோன்று பட்டா கத்தியில் கேக் வேட்டும் கலாச்சாரம் காணாமல்போன நிலையில் மீண்டும் பட்டா கத்தியில் கேக் வெட்டும் கலாச்சாரம் ஆரம்பமாகியுள்ளது.