தமிழக முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்.

எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளரும், முதல்வருமான பழனிசாமி இன்று (மார்ச் 12) சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். அங்கிருந்து, கார் மூலம் சேலம் வருகிறார். சேலத்தில் தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

பின்னர், சேலம் மாவட்டம் வாழப்பாடியில் மாலை 5 மணிக்கு பரப்புரையை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி, ஏற்காடு தொகுதி வேட்பாளர் சித்ராவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். தொடர்ந்து, கெங்கவல்லி தொகுதியில், வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்தும், ஆத்தூர் தனித்தொகுதியில் வேட்பாளர் ஜெயசங்கரனை ஆதரித்தும் அவர் வாக்கு சேகரிக்கிறார். இதன்பின், சேலம் வடக்கு தொகுதி வேட்பாளர் வெங்கடாஜலம், சேலம் தெற்கு தொகுதி வேட்பாளர் பாலசுப்ரமணியன் ஆகியோரை அறிமுகப்படுத்தி அவர்களுக்காக வாக்கு சேகரிக்கிறார். இதற்காக, அங்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், 3 நாட்கள் சேலத்தில் தங்கும் முதல்வர், பல்வேறு ஊர்களில் பிரச்சாரம் மேற்கொள்வதோடு, எடப்பாடி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளார்.