உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடந்து வரும் மைதானத்தில் தொடர் மழை பெய்து வருவதால் நான்காம் நாள் ஆட்டம் நடக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியா- நியூஸிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடந்து வருகிறது. இதில் முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் கைவிடப்பட்டது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளுக்கு 146 ரன்கள் எடுத்திருந்தது.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி வீரர்களால் நியூஸிலாந்தின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியவில்லை. தொடர் விக்கெட்டுகள் சரியவே மொத்தம் 217 ரன்களுக்குத் தனது முதல் இன்னிங்ஸை இந்திய அணி நிறைவு செய்தது.
தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்களை எடுத்திருந்தது. ஆட்டம் நடந்த இரண்டு நாட்களுமே ஒளி மங்கியதாலும், தொடர் மழையாலும் ஆட்டம் தடைப்பட்டு வந்தது. இந்நிலையில் நான்காம் நாள் ஆட்டம் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மைதானம் நடக்கும் பகுதியிலிருந்து அவ்வப்போது வானிலை நிலவரத்தைப் பகிர்ந்து வருகிறார் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக். இவர் தற்போது வர்ணைனையாளர் குழுவில் இடம்பெற்றுள்ளார். திங்கட்கிழமை காலை வானிலையைப் பகிர்ந்த தினேஷ் கார்த்திக் அவ்வளவு சிறப்பாக இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.