கூகுள் பே, போன் பே உட்பட யுபிஐ செயலிகளில் மேற்கொள்ளப்படும் அன்லிமிடெட் பரிவர்த்தனைகளுக்கு விரைவில் லிமிட் செய்யும் சூழல் வரலாம் எனத் தெரிகிறது. அதற்கான பணிகளை இந்தியாவில் யுபிஐ டிஜிட்டல் சிஸ்டத்தை கவனித்து வரும் தேசிய பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, ரிசர்வ் வங்கியுடன் இணைந்து மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.

மூன்றாம் தரப்பு செயலி வழங்குநர்களுக்கான அளவீடு தொடர்பான வரம்பைக் கட்டுப்படுத்துவதற்கான காலக்கெடு வரும் டிசம்பர் 31-ம் தேதியோடு நிறைவு பெறுகிறது. அதனால் இதனை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான பணிகளை தேசிய பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ஈடுபட்டுள்ளதாக தகவல்.

இந்தியாவில் நொடிப் பொழுதில் டிஜிட்டல் முறையில் சாமானியர்கள் தொடங்கி அனைத்து தரப்பினரும் பணத்தை பெறவும், அனுப்பவும் உதவுகிறது யுபிஐ பேமென்ட். இது வணிகர்கள், வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும் சாதகமானதாகவும் உள்ளது.

கூகுள் பே, போன் பே, அமேசான் பே, BHIM என பல்வேறு செயலிகளின் மூலம் யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. நாளுக்கு நாள் இதன் பயனர்கள் மற்றும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. இதற்கு வங்கி கணக்கு மட்டுமே அடிப்படை. இந்த சூழலில் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு வரம்பு விதிக்கும் நடைமுறை விரைவில் அமலாக உள்ளதாக தெரிகிறது. இருந்தாலும் இது தொடர்பான இறுதி முடிவு வெளிவந்தால் மட்டுமே முழு விவரங்கள் தெரியவரும்.

தற்போது கூகுள் பே மற்றும் போன் பே என இரண்டும் இந்திய சந்தையில் சுமார் 80 சதவீத பங்கை கொண்டுள்ளதாக தெரிகிறது. இதனை 30 சதவீதமாக கொண்டு வர வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என தேசிய பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா முன்மொழிந்துள்ளதாக தகவல். அதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்பது யுபிஐ சேவை வழங்கி வரும் செயலி வழக்குநர்களின் கோரிக்கையாக உள்ளது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்